கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள முத்துக்கல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் TTF வாசன். இவர் இருசக்கர வாகனத்தில் ஊர் ஊராகப் பணம் செய்து தனது அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றி வெளியிட்டு வருகிறார். இவரின் Twin Throttlers என்ற யூடியூப் பக்கத்திற்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். மேலும் இவருக்கு இந்த வீடியோக்கள் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.
பைக்கிலே ஊர் ஊராக சுற்றி அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வருவார். மேலும் இவர் பைக் ரேசர் என்பதால் தனது பைக்கில் அதிவேகமாகச் செல்லுவது போன்ற வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். பப்ளிசிட்டிக்காக இவர் செய்யும் அட்ராசிட்டிகளால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
கடந்த ஆண்டு கூட காஞ்சிபுரம் ஆருகே அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதையடுத்து பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டியதாக வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். மேலும் TTF வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கார் மூலமாக ஊர் ஊராக சுற்றி அதை வீடியோ எடுத்து யூடியூபில் வெளியிட்டு வருகிறார். அப்படி கடந்த 15 ஆம் தேதி சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி சென்றுள்ளார்.
அப்போது செல்போனில் பேசியபடி வாசன் கார் ஓட்டியுள்ளார்.மேலும் அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் காரை இயக்கியுள்ளார். இது அவர் வெளியிட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர ஆயுதப்படை உதவி ஆய்வாளர் மணிபாரதி அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து TTF வாசனை போலிஸார் கைது செய்துள்ளனர்.