நாங்குநேரியில் காவலர் ஒருவர் சீருடையில் பயணிக்கும் போது டிக்கெட் எடுப்பது குறித்து நடத்துனருக்கும் காவலருக்கு ஏற்பட்ட வாக்குவாதம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசும் பொருளாகியது. பலரும் இது குறித்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசாருக்கும் மாநகரப் பேருந்து ஓட்டுநர் நடத்துனர் இடையே தகராறு நிலவி வந்ததாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது. மேலும், காவல்துறைக்கும் போக்குவரத்து துறைக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் கூட்டப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தொழிற்சங்கங்கள் சார்பில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனிடையே உள்துறை செயலாளர் மற்றும் போக்குவரத்துக்கு துறை அதிகாரிகள் இடையே சந்திப்பு நடைபெற்றது.
தொடர்ந்து நாங்குநேரியில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுப்பது தொடர்பாக விவாதத்தில் ஈடுபட்ட பேருந்து நடத்துநர் மற்றும் காவலர் ஆகியோர் கைகுலுக்கி, ஆரத்தழுவி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இது குறித்த வீடியோவும் ஊடகங்களில் வெளியானது.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக அரசு பேருந்துகளுக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் விதிக்கப்பட்ட அபராதங்கள் திரும்ப பெறப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியான நிலையில், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காவல்துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.