மக்களவை தேர்தல் நிறைவடைந்த நிலையில் தமிழ்நாடு வாக்குப்பதிவு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.
தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில், ஒட்டுமொத்தமாக 69.72 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
அதில் ஆண் வாக்காளர்கள் 69.58 விழுக்காடும், பெண் வாக்காளர்கள் 69.85 விழுக்காடும் வாக்களித்திருக்கின்றனர்.
0.27 விழுக்காடு பெண்கள், ஆண்களை விட கூடுதலாக வாக்களித்திருக்கின்றனர்.
அதாவது, தேர்தலில் பதிவான 4,34,58,875 வாக்குகளில், பெண்களின் பங்கு சுமார் 10 இலட்சம் வாக்குகள் அதிகமாகவே இருந்திருக்கிறது.
நகரப்பகுதிகளை விட, ஊரக பகுதிகளில் பெண்கள் கூடுதலாக தங்களது வாக்குகளை செலுத்தி இருக்கின்றனர் என்கிறது பல்வேறு புள்ளிவிவரங்கள். குறிப்பாக சிவகங்கை, இராமாநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில்,
பெண்கள் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பதிவு செய்திருக்கின்றனர்.
வாக்கு செலுத்துவதற்கு பெண்களிடையே ஏற்பட்டுள்ள இந்த எழுச்சிக்கு, திராவிட மாடல் அரசிற்கும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் பெண்கள் மத்தியில் கிடைத்திருக்கும் ஆதரவே காரணம் என அரசியல் திறனாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் சென்ற முதலமைச்சர் அவர்களுக்கு “எங்கள் அண்ணனின் தாய் வீட்டு சீர்” என தாய்மார்கள் தமிழகமெங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’-க்கு வரவேற்பு தெரிவித்து பதாகைகள் ஏந்தி நின்றனர். அதன் வெளிப்பாடு தான் இந்த பெண்கள் அளித்திருக்கும் வாக்குகள் என கூறுகின்றனர் தேர்தலில் பணியாற்றிய இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள்.
உதாரணத்திற்கு சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ என்பது சமூதாய புரட்சி மட்டுமல்ல கிராமப்புறங்களில் ஏற்படுத்தியிருக்கும் மிகப் பெரிய பொருளாதார புரட்சி என அவர் மேற்கொண்ட தின்னைப்பிரச்சாரம் இணையத்தில் வைரலானது.
அந்த தொகுதியில் மட்டும் ஆண்களை விட 89 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் வாக்களித்திருக்கிறார்கள். இதன்வழி, மக்களுக்கான திட்டமாக இருப்பின் அதை மக்கள் பிரம்மாண்டமாக கொண்டாடுவார்கள் என்பதற்கான அடையாளம் தான் ’கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!’ என்பது வெளிப்பட்டிருக்கிறது.