மயிலாப்பூர் சிட்பண்டு நிறுவனம் மூலம் ரூ.525 கோடி மோசடி செய்ததாகச் சிவகங்கை பா.ஜ.க வேட்பாளர் தேவநாதன் மீது தமிழ்நாடு காங்கிரஸ் செய்திப் பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இது குறித்து ஆனந்த் சீனிவாசன், வழக்கறிஞர் சூரிய பிரகாஷ் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது "மயிலாப்பூர் நிதி நிறுவனம் இந்தியாவில் உள்ள பழமையான நிதி நிறுவனங்களில் ஒன்று. இதில் ரூ.525 கோடி மோசடி நடைபெற்றுள்ளது.
தேர்தல் முடிந்தவுடன் தேவநாதன் வெளிநாடு தப்பி சென்றால் அவரை பிடிப்பது கடினம் என்பதால் தமிழ்நாடு காவல்துறை இந்த பிரச்சனையில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அண்ணாமலை தேவநாதனை பாதுகாக்கக் கூடாது" என வழக்கறிஞர் சூரிய பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
பின்னர் பேசிய ஆனந்த் சீனிவாசன், "தேவநாதன் அளித்துள்ள காசோலை 4 மாதமாக வங்கியில் செல்லுபடியாகாமல் திரும்பி வந்துள்ளது. அவர் தேர்தலில் போட்டியிட B படிவத்தில் எப்படி அண்ணாமலை கையெழுத்திட்டார்?. மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்படும். எப்போதும் நியாயம் பேசும் நிர்மலா சீதாராமன் இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.