தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நாளை தொடங்குகிறது. இத்தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. 12,616 பள்ளிகளை சேர்ந்த 9.38 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். 28 ஆயிரம் தனித் தேர்வர்களும், 235 சிறை கைதிகளும் தேர்வு எழுதுகிறார்கள்.
48,700 ஆசிரியர்கள் பொதுத் தேர்வுக்கான அறைக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். அதேபோல் 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களில் மாணவர்கள் வசதியாக தேர்வு எழுத குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம் மற்றும் வெளிச்சமான அறைகள், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூகவலைதளத்தில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே.. All the best!
நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள்" என தெரிவித்துள்ளார்.