முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு தலா 3 ஆண்டுகள் தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ந் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.இதை எதிர்த்து பொன்முடி சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த விசாரணையில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடுத்து திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவர் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வார். இதைத் தொடர்ந்து அமைச்சராக க.பொன்முடி பதவியேற்பு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் அவர்களால் ஆளுநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 24 மணி நேரத்துக்குள் பதவியேற்பது குறித்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கெடு விதித்திருந்தது. இதையடுத்து பொன்முடியை பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையில் பொன்முடிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கி ஒப்புதல் வழங்கிட வேண்டும் என ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று பொன்முடிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்க ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பொன்முடிக்கு அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் ”மாநிலத்தின் ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டதை இதுவரையில் தட்டிக் கேட்க யாருமில்லை என்ற மமதையோடும் ஆணவத்தோடும் செயல்பட்டு இருந்த ஆளுநர்களுக்கு எல்லாம் ஒரு குட்டு'ஐ வாங்கி கொடுக்கும் வகையில் பொன்முடி வழக்கில் சரியான நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது.” திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
இதேபோல், ”தான் யார் என்பதையும்,நீதியும் தர்மமும் என்ன செய்யும் என்பதையும், ஆதிக்க ஆணவமும்,அதிகார துரைத்தனமும் ஒரு நாள் வீழ்ந்தே தீரும் என்பதையும்-
ஆர்ப்பாட்டம் இல்லாமல்,ஆரவாரம் இல்லாமல் தனக்கே உரிய மவுனப் புன்னகையுடன் சாதித்துக் காட்டியிருக்கும் நமது முதலமைச்சர். அவமானப்பட்டு நிற்கும் அதர்மம். மீண்டும் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் பொன்முடி பணி சிறக்க வாழ்த்துக்கள்.”என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.