இந்தியத் தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக இருப்பதால் தான் பிரதமர் மோடி வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 370 இடங்களையும், கூட்டணியோடு 400 இடங்களையும் கைப்பற்றுவோம் என்று உறுதியாக கூறுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கை பின்வருமாறு :
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றது முதல், அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட சுதந்திரமான அமைப்புகள் சுயேட்சையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. அதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. நாளுக்கு நாள் அந்த அமைப்புகள் நம்பகத்தன்மையை இழந்து வருகின்றன. மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட வேண்டிய நேரத்தில் தேர்தல் ஆணையம் அதன் அதிகாரிகளை தேடிக் கொண்டிருப்பது கேலிக்குரியதாக உள்ளது.
மக்களவைத் தேர்தல் ஒருசில நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிற நிலையில், எதிர்பாராத விதமாக தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு தலைமை தேர்தல் ஆணையர், இரண்டு தேர்தல் ஆணையர் பதவிகள் உள்ளன. தற்போது தலைமை தேர்தல் ஆணையராக ராஜிவ்குமார் செயல்பட்டு வருகிறார்.
இரண்டு தேர்தல் ஆணையர்களில் ஒரு பணியிடம் காலியாக உள்ளது. மற்றொரு ஆணையரான அருண் கோயல் கடுமையான கருத்து வேறுபாடு காரணமாக பதவி விலகுவதற்கான காரணங்களை கூறாமலேயே வெளியேறிவிட்டார். இதன்மூலம், தேர்தல் ஆணையம் எப்படி தேர்தலை சந்திக்கப் போகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அருண் கோயலின் பதவிக் காலம் 2027 ஆம் ஆண்டு வரை உள்ளது. இந்நிலையில், அவர் பதவி விலகியிருப்பது கடும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
அரசமைப்புச் சட்டப்படி இதுவரை தேர்தல் ஆணையர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது ஒரு நீதிபதி, பிரதமர், எதிர்கட்சித் தலைவர் அடங்கிய குழு தான் தேர்வு செய்யும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மோடி அரசு சட்டத் திருத்தம் செய்து, உச்சநீதிமன்ற நீதிபதியை தேர்வுக் குழுவிலிருந்து நீக்கிவிட்டு, பிரதமர், அவரது பரிந்துரைப்படி ஒரு அமைச்சர், எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்கிற நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதன்மூலம் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டு பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்தில் இரு உறுப்பினர்களையும், அவரது பரிந்துரையின்படி விரைவில் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இது 140 கோடி மக்களை கொண்ட இந்திய ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். 2024 மக்களவை தேர்தலை, மோடியால் தேர்வு செய்யப்பட்ட தேர்தல் ஆணையம் எப்படி கையாளப் போகிறது என்ற அச்சம் இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
மக்களவைத் தேர்தல் சுதந்திரமாக, சுயேட்சையாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகமிகக் குறைவாக உள்ளன. சமீபத்தில் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் செல்லாது என்று அறிவித்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்திருக்க வேண்டும். அதனைத் தேர்தல் ஆணையம் மார்ச் 13 ஆம் தேதி தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும். இதனை முடக்குகிற வகையில் பிரதமர் மோடி அரசு தேர்தல் ஆணையத்தை தனது கைப்பாவையாக கையாள முயற்சி செய்கிறது.
தேர்தல் நன்கொடை பத்திரங்களில் வழங்கப்பட்ட மொத்த நன்கொடை ஏறத்தாழ 13,000 கோடி ரூபாய். இதில் பா.ஜ.க. பெற்றது 6572 கோடி ரூபாய். மொத்த நன்கொடை அளித்தவர்களில் ரூபாய் 1 கோடி அளித்தவர்கள் 6812 பேர். மொத்த நன்கொடையில் பெரும் பங்கு ரூபாய் 1 கோடி அளித்தவர்கள் தான். இவர்களுடைய பட்டியல் வெளிவந்தால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பா.ஜ.க.வுக்கும் உள்ள ரகசிய உறவுகள் அம்பலமாகும் என்ற அச்சம் பிரதமர் மோடிக்கு ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாகத் தான் தேர்தல் ஆணையத்திலிருந்து அருண் கோயல் போன்றவர்கள் பதவி விலகுகிற நிலை ஏற்பட்டது.
இன்றைய தேர்தல் நடைமுறை என்பது சமநிலைத்தன்மை இல்லாததாக இருக்கிறது. இதன் பின்னணியில் இந்தியத் தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக இருப்பதால் தான் பிரதமர் மோடி வருகிற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. 370 இடங்களையும், கூட்டணியோடு 400 இடங்களையும் கைப்பற்றுவோம் என்று உறுதியாக கூறுகிறார். இதன்மூலம், ஜனநாயகத்தில் ஒரு சர்வாதிகாரி போல தேர்தல் ஆணையத்தை தனது கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு இந்திய ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்துக் கொண்டிருக்கிறார். இதிலிருந்து, இந்திய ஜனநாயகத்தை மீட்பதற்கு இந்தியா கூட்டணியின் வெற்றியே உரிய தீர்வாக அமைய முடியும்.
சர்வாதிகார அரசியலை செய்து வருகிற மக்கள் விரோத மோடி ஆட்சியை அகற்றுவதே ஒரே நோக்கமாக கொண்டு நாம் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன்மூலம் மோடி ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்களின் பேராதரவோடு தலைவர் ராகுல்காந்தியின் கடுமையான உழைப்பின் மூலம் மோடி ஆட்சி நிச்சயம் அகற்றப்படும்.