மதுரை மாவட்டம் பில்லுசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பிள்ளை. இவர் விவசாய வேலைகளுக்குப் பெண்களை அழைத்துச் சென்று அவர்களுக்கான கூலியை உரிமையாளர்களிடம் பெற்று, அதை ஒவ்வொருவருக்கும் குழு தலைவியாக இருந்துவந்தார். இப்போது அவர்களுக்கு உறுதியான வந்ததுதான் களஞ்சியம் என்ற சுயஉதவிக்குழு.
பின்னர் இந்த குழுவினர் பல கிராமங்களுக்குச் சென்று பெண் விவசாயிகளுக்குக் கிடைக்கும் நியாயமான கூலிகளைப் பெற்றுக் கொடுத்தனர். இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சின்னப்பிள்ளை. இவரின் இந்த முயற்சி கந்துவட்டி கொடுமையிலிருந்து மக்களை மீட்கப் பெரிய உதவியாக இருந்தது.
இதையடுத்து சின்னப்பிள்ளையை கவுரவிக்கும் விதமாக 2001 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற விழாவில் ஸ்த்ரீ சக்தி புரஷ்கார் - மாதா ஜீஜாபாய் என்ற விருதை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் வழங்கினார். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வணங்கினார். மேலும் 2019 ஆம் ஆண்டு சின்னப்பிள்ளைக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. வறுமையும், வயது மூப்பும் இருந்தாலும் தொடர்ந்து சமூகப்பணி ஆற்றி வருகிறார் சின்னப்பிள்ளை.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது வீட்டிற்குச் சென்ற சிலர் பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இப்போது வரை அவருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படவில்லை.
"நான் பாட்டுக்கு வீட்டுல இருந்தேன். திடீரென்று நாலு பேர் வந்து சால்வை போர்த்தினாங்க. மோடியோட ‘அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்’ இருக்கு. அதுல வீடு கட்டி தர்றோம்னு சொன்னாங்க. பட்டா கொடுத்தாங்க. ஆனா ரெண்டு வருஷம் ஆயிடுச்சு. இதுவரை வீடு கட்டித் தரலை. என்னாலையும் எதுவும் செய்ய முடியல!” என கண்ணீர் மல்க கூறியுள்ளார் மதுரை சின்னப்பிள்ளை.