ஒன்றிய பாஜக அரசு கடந்த 2015ம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு அரசிடமிருந்து 224.24 ஏக்கர் நிலம் ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை மாவட்டம் தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பின்னர் எந்த பணியையும் மேற்கொள்ளாத ஒன்றிய பாஜக அரசு 3 ஆண்டுகளுக்கு பிறகு, 5 கோடி ரூபாயில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டியது. உரிய நேரத்தில் கட்டுமான பணி தொடங்காமல் தாமதம் செய்ததால் 713 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக நிபுனர்கள் விமர்சித்து வந்தனர்.
அதேவேளையில், தி.மு.க. அரசு அமைந்த பிறகு உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிட வேண்டுமென முதல்வர் அவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டப்படவில்லை என்றாலும், 2021 ஆம் ஆண்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, மாணவர் சேர்க்கை நடைபெற்று ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கப்பட்டன.
மதுரை தோப்பூரில் சுற்றுச்சுவரை கட்டியதை தவிர ஒன்றிய அரசு வேறு எந்தப் பணியையும் தொடங்கவில்லை. மதுரை எய்ம்ஸ் பணிகள் துவங்கப்பட்டால் 45 மாதங்களில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 5 வருடங்கள் முழுமையாக நிறைவடைந்துவிட்டன. ஆனால் நாட்டிய செங்கல் அப்படியே இருக்கிறதே தவிர கட்டுமானப்பணிகள் இன்னும் தொடங்கிய பாடில்லை.
அதாவது 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வர வேண்டும். ஆனால் இப்போதே 5 வருடங்கள் முடிவடைந்து விட்டன. இன்னும் பணிகள் தொடங்கக் கூடிய அறிகுறிகளைக் கூட காணோம். இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், கட்டுமான பணியை ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக மதுரை நாடாளுமன்ற எம்.பி சு.வெங்கடேசன் பேசுகையில், “மதுரை எய்ம்ஸ்-க்கான கட்டுமான பணியை ஒரு ரகசிய திட்டத்தை போல ஒன்றிய அரசு இன்று துவக்கி இருக்கிறது. கடந்த வாரம் தான் பிரதமர் மதுரைக்கு வந்தார். அவர் இந்த திட்டத்தை துவக்கி வைத்திருக்கலாம். உண்மை சுடும். எனவே தோப்பூர் பக்கமே போகாமல், விமான நிலையத்துக்கு போனதை நாடு பார்த்தது.
ஒரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அந்த திட்டம் துவக்குவதற்கு இடையில் 5 ஆண்டுகள் உருண்டோடிய ஒரு பெரிய வரலாற்றை இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறது. பாஜக ஆட்சியில் இந்த செயல் என்பது வெளிப்படையாக நாடாளுமன்ற தேர்தலுக்காக நடத்துகிற ஒரு நாடகம் என்பது நாடறியும்.
இப்பொழுது கூட அங்கு நிர்வாகத்தில் இருப்பவர்களிடம் பேசினேன். பொறியியல் துறை மட்டுமே வைத்து ரகசியமாக இந்த திட்டத்தை துவக்குவது போல துவக்கி இருக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொது தேர்தல் என்பதால், ஜனவரி மாதம் பிரதமர் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அதேபோல இப்பொழுது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மே பொதுத் தேர்தல்கள் என்பதால், மார்ச் மாதம் திட்டப் பணியை துவக்குவதாக அறிவிக்கிறார்கள். இவை அனைத்தும் ஒரு வெளிப்படையான திசை திருப்பும் நாடகம்தான். ஆறு மாதத்திற்கு முன்பு நாடாளுமன்றத்தில் எல்லா எம்.பி-க்களும் கேள்வி கேட்ட பொழுது, 2026 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என்று சொன்னார்கள்.
இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட எய்ம்ஸ்கள் இருக்கிறது. அனைத்தும் நிறுவனத்துக்குமான நிதியை ஒன்றிய அரசுதான் முழுமையாக கொடுக்கின்றது. மதுரையை எய்ம்ஸ்-க்கு மட்டும்தான் கடன் வாங்கி கட்டுகிறோம் என்று சொல்கிறார்கள். ஏன் மதுரையின் மட்டும் கடன் வாங்குகிறீர்கள் என்று அதற்கான காரணத்தை கேட்டால் பதில் சொல்லவில்லை. கடன் வாங்குவதையும் ஒழுங்காக செய்யவில்லை.
அதுமட்டுமல்லாது, ஒன்றிய அரசு 350 கோடி மட்டுமே வைத்து இத்திட்டத்தை தொடங்குகிறார்கள் என்று சொன்னால் கூட, அதற்கான காரணத்தை அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்க வில்லை. எனவே தொடர்ந்து தமிழ்நாடு வளர்ச்சித் திட்டங்களை எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ, எவ்வளவு தூரம் இழுத்தடிக்க முடியுமோ அதை செய்வதுதான் மோடி அரசினுடைய பணி. அதைத்தான் மதுரை எய்ம்ஸிலும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் இந்த பாஜகவின் அரசியலை நன்கு அறிவார்கள். ஒரே அமைச்சரவை கூட்டத்தில், 6 எய்ம்ஸ்கள் முடிவுகள் எடுக்கப்பட்டது. ஆறில் ஐந்து கட்டி முடிக்கப்பட்டது, மதுரை எய்ம்ஸ் இன்று தான் கட்டடத்தை துவக்குவதாக ஒரு புல்டோசரை வைத்து குப்பைகளை அகற்றி, கட்டுமான பணிகள் துவக்குகிறோம் என்று கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது தேர்தலுக்கான பாஜகவின் நாடகம் என்பது நாடு அறியும்” எனத் தெரிவித்துள்ளார்.