தமிழ்நாடு

'மகன்' கட்டித் தந்த புது வீட்டில் குடியேறினார் கலைஞர் ! - ப.திருமாவேலன் கட்டுரை !

'மகன்' கட்டித் தந்த புது வீட்டில் குடியேறினார் கலைஞர் ! - ப.திருமாவேலன் கட்டுரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புது வீட்டில் குடியேறினார் கலைஞர்!

........................................................

பிப்ரவரி 26 - புது வீட்டில் கலைஞர் குடியேறி இருக்கிறார். 'மகன்' கட்டித் தந்துள்ளார். சாதாரண மகன், தன் தந்தைக்கு கட்டி எழுப்புவது வரலாறு ஆவதில்லை. தலைவராகவும் முதலமைச்சராகவும் ஆன பிறகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் கட்டி எழுப்பி இருப்பது தான் பெரும் வரலாறு.

தர மறுக்கப்பட்ட நிலத்தை - சட்டப் போராட்டம் நடத்தி வென்று - அத்தோடு மக்கள் மனதையும் வென்று ஆட்சியைப் பிடித்து - தலைவர் என்ற முழுத்தகுதியும் - முதலமைச்சர் என்ற முழுமுதல் தகுதியையும் பெற்ற பிறகு இது அமைந்திருக்கிறது.

எல்லாவற்றையும் பெரிதினும் பெரிதாக கற்பனை செய்து வைத்திருப்பார் கலைஞர். 133 அடிக்கு திருவள்ளுவருக்கு சிலை வை, வள்ளுவர் கோட்டத்தில் 128 உயரத்துக்கு தேர் வை... என்பதெல்லாம் கலைஞருக்கு மட்டுமே வாய்க்கும் கற்பனைகள். அவரது கற்பனைக்கும் எட்டாதது தான் இந்த நினைவகம். 95 ஆண்டு வாழ்க்கையை ஒரு சுற்று வட்டப் பாதைக்குள் தொழில் நுட்ப உதவியோடு அடக்கிக் காட்டி விட்டார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

கோபல்லபுரத்துக் கோமான், கடற்கரையில் தமிழர்களின் கலங்கரை விளக்காக ஒளி வீசத் தொடங்கி இருக்கிறார்.

கோபாலபுரம் வீடு - தமிழ் அவையாய் இருந்தது.

முரசொலி - அவரது ஞான சபையால் காட்சியளித்தது.

அறிவாலயம் - உடன்பிறப்பின் உணர்ச்சி அவையாய் மிளிர்ந்தது.

சென்னை கோட்டை - தமிழ்நாட்டின் மக்கள் அவையாய் காட்சி அளித்தது. நான்கிலும் கோலோச்சினார் கலைஞர்.

இந்த நான்கையும் ஒன்றாய் பார்க்க நினைப்பவர்கள் கடற்கரைக்கு வாருங்கள். கலைஞர் நினைவகம் இந் நான்கின் மொத்த அவையாக இருக்கிறது.

கலைஞர் எப்போதும் தனி உயிரல்ல. அரசியல்வாதி - இலக்கியவாதி( இலக்கியத்தில் எல்லா வகையும் உண்டு!) - திரையுலக கர்த்தா - பெருங்கவிஞர் - பாடலாசிரியர் - நாடக ஆசிரியர் - நாடக நடிகர்- பேச்சாளர் - பத்திரிக்கை ஆசிரியர் -கார்ட்டூனிஸ்ட் - என எல்லாம் கலந்த கலவை அவர். சிலை செதுக்கும் சிற்பிக்கும் உளிவழி காட்டவும் செய்வார். இசை வாசிக்கும் கலைஞருக்கும் ரிதம்பதம் சுட்டவும் செய்வார். எல்லாம் அறிந்தவரை ஒரு குடைக்குள் அடக்குதல் கடினம்.

எட்டரை ஏக்கர் பரப்பில் எழிலார்ந்த வனப்பில் எல்லாவற்றையும் உள்ளடக்கி , பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு உருவாக்கத்தில் நினைவகம் மிளிர்கிறது. கலைஞர் மீது மாறா அன்பும், கட்டடக் கலை அறிவும் கொண்டவராக பொதுப்பணித்துறை அமைச்சர் இருப்பதால் தான் இது சாத்தியம் ஆனது.

'மகன்' கட்டித் தந்த புது வீட்டில் குடியேறினார் கலைஞர் ! - ப.திருமாவேலன் கட்டுரை !

உள்ளே என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா?

பேரறிஞர் அண்ணா சதுக்கம், அண்ணா சிலை, அண்ணா அருங்காட்சியகம்,முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம், கலைஞர் சிலை, தமிழ்ச் செம்மொழியாக வழங்கப்பட்டபோது சோனியா அம்மையார் கலைஞருக்கு எழுதிய கடிதம் கல்வெட்டு வடிவில், கலைஞரின் வாழ்க்கை காட்சிகள் கொண்ட புகைப்படங்களின் குவியல், இந்தியாவின் அனைத்து முதலமைச்சர்களுக்கும் கொடியேற்றும் உரிமை பெற்றுத் தந்த முழக்கக் காட்சிகள், கோபாலபுரம் கலைஞர் அறையில் அவரோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம், அவரோடு அமர்ந்து உரையாடலாம், அவர் எழுதிய புத்தகங்களின் தலைப்பை தொட்டால் அந்த புத்தகம் பற்றி கலைஞரின் குரலில் அறியலாம், கலைஞரின் புதிர் போட்டியில் கலந்து கொண்டு அதில் வென்றால் கலைஞர் குரலில் பாராட்டைப் பெறலாம், மகளிர் திட்டங்களின் காட்சிகள், காமிக்ஸ் புதிர் வடிவில் கலைஞரின் வரலாறு, மண்சாலைகளை தார்ச்சாலைகள் ஆக்கியதும், குடிசைகளை கோபுரங்களாக கட்டியதுமான மாற்றங்கள், நவீன தமிழ்நாட்டை அவர் எப்படி கட்டி எழுப்பினார் என்பதற்கான காட்சிகள், கலையுலகிலும் அரசியலிலும் அவர் வெற்றிக் கொடி நாட்டிய வரலாற்றைச் சொல்லும் 20 நிமிட காட்சிப் படம்... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

உங்களுக்காக ஒரு புகைவண்டி காத்திருக்கிறது. திருவாரூரில் ஏற்றி சென்னைக்கு கொண்டு வந்து இறக்கி விடும். த்ரிடி காட்சிகளில் கல்லக்குடியில் அவர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தது முதல் ஒவ்வொரு நகரங்களிலும் அவர் உருவாக்கிய கட்டமைப்புகள் வரை பார்த்தபடியே வலம் வரலாம். தட தட அதிர்வுகளோடு முழுக்கலைஞரையும் அறியலாம்.

குறைந்தது இரண்டு மணி நேரம் தேவைப்படும் 'மு.க' என்ற இரண்டெழுத்தை அறிய!

நினைவகம் திறக்கப்படுவது போல இல்லை, 'உணர்வகம்' திறக்கப்பட்டதைப் போலவே இருக்கிறது.

'இந்தியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையில் அமைந்துள்ள முதல் அதிசயம் இது' என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருப்பது முழு உண்மை!

'ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இங்கே உறங்குகிறான் என்று எனது கல்லறையில் எழுதவேண்டும் என்பதற்காகவே தவம் இருக்கிறேன்' - என்றார் கலைஞர்.

ஓய்வெடுக்காமல் உழைத்த தலைவர், இப்போதும் உறங்கவில்லை. உழைத்துக் கொண்டு தான் இருக்கிறார். உழைப்பு என்பது செயல்படுவது மட்டுமா? இல்லை, செயல்பட வைப்பதும் உழைப்புத் தான்!

தன்னில் இருந்து உருவான தலைவனை உழைக்க வைத்து உழைத்துக் கொண்டு தான் இருக்கிறார் கலைஞர்!

'ஒருவன் எத்தனை ஆண்டு காலம் வாழ்ந்தான் என்பதை அவனது மரணத்துக்குப் பிறகு கணக்கிட வேண்டும்' என்றவரும் அவர் தான். 2018 ஆகஸ்ட் 7 க்குப் பிறகு கலைஞரின் பிறப்பு கணக்கிடப்படுகிறது. ஐந்து வயதுப் பிள்ளை. திருவாரூரின் முல்லை. இன்று தமிழ்நாட்டின் எல்லையாக தலைநகரில் எழுந்து நிற்கிறார் கலைஞர்.

அரசியலில் அவர் சூடான உதயசூரியன்.

கலையுலகில் குளிர்ச்சிமிகு சந்திரன்.

சூரியனும் சந்திரரும் கடலோரத்தில் ஒருசேரக் காணக் கிடைத்த கருவூலமே கலைஞர் நினைவகம்.

அது இனி கலைஞர் திடல்! கலைஞர் கடல்!

- ப.திருமாவேலன்

banner

Related Stories

Related Stories