தமிழ்நாடு

மீண்டும் பொய் கூறிய அண்ணாமலை... ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய Youturn ஊடகம் : பின்னணி என்ன ?

மீண்டும் பொய் கூறிய அண்ணாமலை... ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய Youturn ஊடகம் : பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு வேறு பெயர் கொடுத்து மாநில அரசு புதிய திட்டங்களாக அறிமுகம் செய்துள்ளது என்றும், வீடற்றோருக்கு வீடு வழங்கும் 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தை ‘கலைஞர் கனவு இல்லம்' எனும் திட்டமாக மாற்றியுள்ளது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்த சூழலில், தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழுவின் அதிகாரப்பூர்வ கணக்கில் பாஜக பரப்பிய பொய் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

"பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் :

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் என்பது ரூ.1.2 லட்சம் வழங்கும் திட்டமாகும். இதில் ரூ.72,000 ஒன்றிய அரசும், ரூ.48,000 தமிழ்நாடு அரசும் வழங்குகின்றன.

ஒன்றிய அரசு வழங்கும் தொகை போதாது என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு, கான்கிரீட் கூரை அமைப்பதற்காக கூடுதலாக ரூ.1,20,000 வழங்குகிறது. ஆக, இத்திட்டத்தில் மொத்தம் ரூ.2,40,000 ஒரு பயனாளிக்கு வழங்கப்படுகிறது.

மேற்கண்ட ரூ.2.4 லட்சத்தில் தமிழ்நாடு அரசு 70% தொகையை வழங்குகிறது. ஒன்றிய அரசு 30% மட்டுமே தருகின்றது.

கலைஞர் கனவு இல்லம் :

இத்திட்டத்தின் முதல் கட்டமாக 1 லட்சம் வீடுகள் தலா ரூ.3.50 லட்சம் செலவில் இவ்வாண்டில் கட்டப்படும். தமிழ்நாடு அரசே ஒட்டுமொத்த நிதியையும் வழங்கும்.

கிராமகளில் ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் இதுவாகும். 2030 ஆம் ஆண்டுக்குள் 'குடிசைகள் இல்லா தமிழ்நாடு' என்ற இலக்குடன் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட இருக்கின்றன.

பயனாளிகளுக்கு வீடு கட்ட நிலம் இல்லாவிடில், நிலத்தையும் அரசே வழங்குகிறது" என்று குறிப்பிட்டிருந்தது.

மீண்டும் பொய் கூறிய அண்ணாமலை... ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய Youturn ஊடகம் : பின்னணி என்ன ?

இருப்பினும் பாஜக தலைவர் அண்ணாமலை வழக்கம்போல் வீடு வழங்கும் திட்டம் குறித்து தவறான தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இந்த நிலையில் பிரபல உண்மை கண்டறியும் நிறுவனமான Youturn செய்தி நிறுவனம் இதுகுறித்த ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில், அண்ணாமலை கூறிய தகவல் அனைத்தும் பொய் என்று ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தி பின்வருமாறு,

”PMAY-U கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டத்தின் கீழ், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், தேசிய வீட்டுவசதி வங்கிக்கு, வட்டி மானியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு அதிகபட்ச வட்டி மானியம் ரூ.2.7 லட்சம் வரை வழங்கப்படுகிறது ” என அண்ணாமலை கூறி இருக்கிறார்.

அண்ணாமலை பேட்டியில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ரூ.2,70,000 மானியமாக அக்கவுண்டில் வருகிறது எனக் கூறினார், ஆனால் பதிவில் வட்டி மானியம் ரூ.2.7 லட்சம் வரை வழங்கப்படுகிறது என்றுள்ளது.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒரு வீடு கட்ட ஒன்றிய அரசு 72,000 ரூபாயும், தமிழ்நாடு அரசு ரூ.1,68,000யும் மானியத் தொகையாக அளிக்கிறது என நமது கட்டுரையில் குறிப்பிட்டதும், அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் கூறியதும் ஊரகப் பகுதியில் (PMAY-Gramin) வீடு கட்ட அளிக்கப்படும் மானியத்தொகை. அண்ணாமலை குறிப்பிட்டு இருப்பது நகர்ப்புற (PMAY-Urban) பகுதியில் வீடு கட்ட அளிப்பது தொடர்பானது.

PMAY-Urban மானியம் குறித்து தேடுகையில், PMAY-Urban திட்டத்தின் கீழ் Affordable Housing in Partnership (AHP), Beneficiary Led Construction (BLC), Credit Linked Subsidy Scheme (CLSS), In-situ Slum Redevelopment (ISSR) எனும் பிரிவுகள் உள்ளன. இதில், AHPல் தமிழ்நாட்டில் நகரப்புறங்களில் வீடு கட்டும் பணிகளுக்கு செலவாகும் ரூ10 லட்சத்தில், ஒன்றிய அரசு ரூ1.5 லட்சமும், மாநில அரசு ரூ7 லட்சமும், பயனாளிகள் ரூ1.50 லட்சமும் அளிக்க வேண்டும் என்றுள்ளது. இதில், தமிழ்நாடு அரசின் நிதியே அதிகம்.

இதில், Credit Linked Subsidy Scheme (CLSS) பிரிவில், பொருளாதரத்தில் பின்தங்கிய பிரிவினர்(EWS)/ நடுத்தர வருமானம் குழு(MIG) கீழ் தகுதிபெறும் நபர்கள் நகரப்புறங்களில் வீடு கட்ட வங்கிகளில் வாங்கும் கடனிற்கே அண்ணாமலை கூறிய வட்டி மானியம் ₹2.7 லட்சம் ஒன்றிய அரசால் வழங்கப்படுகிறது.

மீண்டும் பொய் கூறிய அண்ணாமலை... ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய Youturn ஊடகம் : பின்னணி என்ன ?

PMAY-G நிதி :

அடுத்ததாக, ” 2016-17 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கிடையே, PMAY-G திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கியது ரூ. 5541 கோடி ஆகும். இந்த ஆண்டுகளில், இந்தத் திட்டத்துக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பயன்படுத்திய மொத்த நிதி ₹6921 கோடி. ஒட்டுமொத்தப் பயன்பாட்டில், PMAY-G திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு ஆன மொத்த செலவில், மத்திய அரசு 80% செலவிட்டுள்ளது என்பது தெளிவாகிறது ” என அண்ணாமலை கூறியுள்ளார்.

2023 டிசம்பர் 5ம் தேதி மக்களவையில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (PMAY-G) திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒன்றிய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதில் அளித்து இருக்கிறார். அப்பதிலில், PMAY-G திட்டம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டிற்கு இதுவரை ரூ.5321.64 கோடி ஒன்றிய அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனுடன் மாநில அரசு தனது பங்கையும் சேர்த்து ரூ.7627.08 கோடியை இத்திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளது. இத்திட்டத்தின் மாநில நோடல் கணக்கில்(SNA) ரூ.1247.27 கோடி செலவிடாமல் மீதமுள்ளது. இதன் காரணமாக ஒன்றிய அரசு மேலும் நிதியை ஒதுக்காமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இத்தகவலின்படி பார்கையில், மொத்த தொகையில் ஒன்றிய அரசின் பங்கு 5,321 கோடி என்பது 60% மட்டுமே. எனவே, அண்ணாமலை 80% ஒன்றிய அரசு செலவிடுவதாகக் கூறுவது தவறான தகவல் என்பதை அறிய முடிகிறது.

Youturn
Youturn

நிதி ஒதுக்கீடு மற்றும் செலவு குளறுபடி :

அடுத்ததாக, “இன்னும் சிறிது ஆழமாகச் சென்றால், எடுத்துக்காட்டாக, கடந்த நிதியாண்டு 2022-23ஐ உதாரணமாக எடுத்துக் கொள்வோம். மத்திய அரசின் பங்கு: ₹2004.39 கோடி மொத்தப் பயன்பாடு (மாநிலப் பங்கு உட்பட): ₹2290.47 கோடி. தமிழக அரசின் பங்கு ₹286.08 கோடி எனத் தெரிகிறது. ஆனால், தமிழக அரசின் செலவீட்டுப் பட்டியலில் வேறுவிதமாக இருக்கிறது ” எனத் தெரிவித்து இருக்கிறார்.

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டு ஒன்றிய அரசு அளித்த நிதி குறித்து தேடுகையில், 2024 பிப்ரவரி 6ம் தேதி மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி அளித்த பதில் கிடைத்தது.

இதில், 2022-23ல் ஒன்றிய அரசு அளித்த நிதி ரூ.2,004.29 கோடி என்றும், செலவிடப்பட்ட தொகை ரூ.2290.47 கோடி என்றுள்ளது. இதை வைத்தே அண்ணாமலை தவறான உதாரணத்தை அளித்து இருக்கிறார். அதற்கு காரணம், 2020-21 நிதியாண்டில் ஒன்றிய அரசு அளித்த தொகை ரூ78.62 கோடி மட்டுமே, ஆனால் செலவிடப்பட்ட தொகை ரூ672.61 கோடி என்றுள்ளது. திட்டத்திற்காக கணக்கில் இருக்கும் நிதி முழுமையாக செலவிடாமல் மீதம் இருக்கும் போது, அந்த நிதியை அடுத்த ஆண்டு செலவிட்டு இருக்கின்றனர். இதற்கு முந்தைய பகுதியில், PMAY-G திட்டத்தில் மீதமுள்ள தொகை குறித்து தெரிவித்து இருந்தோம். எனவே, 2022-23ல் தமிழ்நாடு அரசு ரூ286.08 கோடியை மட்டுமே செலவிட்டதாகக் கூறுவது தவறான தகவல்.

இப்படி பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்தும், தமிழ்நாடு திட்டங்கள் குறித்தும் அண்ணாமலை தொடர்ந்து தவறான தகவலை பரப்பி வருவதை அறிய முடிகிறது." என்று குறிப்பிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories