தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் பிப். 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று “தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” என 2024 -25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
நிதிநிலை அறிக்கையில் தமிழ்கனவுகள் என்ற தலைப்பில் சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம்,அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைக்கு பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்று வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இன்று 2024-25ம் நிதியாண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் சில:-
1.முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு. இதன் மூலம் 2 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள்.
2.மண்புழு உரம் ஊக்குவிக்கும் விதமாக 100 விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுக்கைகள் வழங்குவதற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. களர் அமில நிலங்களைச் சீர்ப்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு.
3.வேளாண் காடுகள் திட்டம் மூலம் பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். இதற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
4.கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் 2482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
5.ஆடாதொட நொச்சிபோன்ற உயிர் பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்த்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் இரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.
6.நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்களை பாதுகாக்க 200 மெ.டன் பாரம்பரிய நெல் இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்படும். இதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
7.725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு. உயிர்ம வேளாண்மை மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு.
8.சிறுதானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு. தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க மற்றும் பரவலாக்க ரூ.1.48 கோடி நிதி ஒதுக்கீடு. 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
9.பயிர்க்கழிவுகள் உள்ளிட்ட கரிமப் பொருட்களை வேகமாகச் சிதைத்து கரிமச்சத்தின் அளவை உயர்த்தி, கிடைக்காத நிலையிலுள்ள சத்துகள் கிடைக்கப் பெறவும், பயனுள்ள நுண்ணுயிர்க் கலவையை உருவாக்கிடவும் ஆய்வுகள் மேற்கொண்டு அதன் செயல்திறனை மதிப்பிட ரூ. 1. 39 கோடி நிதி ஒதுக்கீடு.
10.வேளாண் விளைபொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் எளிதில் நகர்ப்புர நுகர்வோரைச் சென்றடைய, விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து, தரம்பிரித்து, சிப்பம்கட்டி, முத்திரையிட்டு விற்பனை செய்ய 100 உழவர் அங்காடிகளுக்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு.