தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே பெண் காவலர் ஒருவர் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி ரோந்து பணியிலிருந்தார். அப்போது ரயில்வே காவல்துறையினர் குடியிருப்பு அருகே உள்ள கோயில் முன்பு மூன்று பேர் மது குடித்துக் கொண்டிருந்தனர்.
இதைபார்த்த பெண் காவலர் அவர்களிடம் விசாரணை செய்துள்ளார். அப்போது அவர்கள் பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர். இது குறித்து பெண் காவலர், காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார்.
பிறகு அங்கு வந்த போலிஸார், மூன்று பேரையும் பிடித்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அப்போதுதான் இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலாளர் குபேந்திரன், அவரது சகோதரர் மற்றும் முத்தமிழ் செல்வன் என தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் மூன்று பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களது மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும் இந்து முன்னணி என்றால் முன்பு மிகுந்த மரியாதை இருந்தது. தற்போது இந்து முன்னணி மோசமாகிவிட்டது என நீதிபதி வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.