‘2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன்’ என்ற பொருளாதாரக் கனவை, முதல்வரின் 10 நாள் சரித்திரப் பயணம் நிச்சயம் நனவாக்கும் என ‘தினகரன்’ நாளேடு 28.1.2024 அன்று தலையங்கத்தில் பாராட்டியுள்ளது.
இது குறித்த அத்தலையங்கம் வருமாறு:–
இந்திய மாநிலங்களில் எப்போதும் தனித்துவம் கொண்டது தமிழ்நாடு. கல்வி, சுகாதாரம், விளையாட்டு, சமூகநீதி சார்ந்த திட்டங்கள் என்று அனைத்திலும் முத்திரை பதித்து நிற்கிறது தமிழ் நிலம். இப்படிப்பட்ட நிலையில், 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறச் செய்யவேண்டும் என்பது அரசின் இலக்காக உள்ளது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இந்த வகையில், சமீபத்தில் சென்னையில் நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.6,64,180 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 27 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த மாநாட்டைத் தொடர்ந்து, மேலும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் அவர்கள் ஸ்பெயின் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்துப் பேசுகிறார். இதேபோல் ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்கும் சென்று தொழிலதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பேச்சுவார்த்ைத என்பதை வெறும் சம்பிரதாயமாக இல்லாமல், சரித்திர சாதனையாக மாற்றுவதை, முதல்வரின் கடந்த கால வெளிநாட்டுப் பயணங்கள் நிரூபித்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் தொழில் தொடங்க உகந்த மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டது. அப்போது 14வது இடத்தில் தமிழ்நாடு இருந்தது. ஆனால், முதல்வரின் முத்தான முயற்சியும், அரசு இயந்திரத்தின் சீரான சுழற்சியும், தற்போது தமிழ்நாட்டை மூன்றாம் இடத்திற்கு முன்னிறுத்தி உள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில்,
5ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இப்போது 3ஆம் இடத்தில் இருக்கிறது. புத்தொழில் சார்ந்த செயல்பாட்டுக்கான ‘லீடட்’ அங்கீகாரத்தை, ஒன்றிய அரசு நமது மாநிலத்திற்கு வழங்கி இருப்பது வேறு எவருக்கும் இல்லாத பெருமிதம்.
இந்தியாவிலேயே, தமிழ்நாடு மொத்த உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) இரண்டாவது பெரிய மாநிலமாக திகழ்கிறது. தற்போதைய தமிழ்நாட்டின் ஜிஎஸ்டிபி 320 பில்லியன் என்ற அளவில் உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு கடந்த 2 ஆண்டுகளில் எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ், லெதர் ஆகிய துறைகளில் மிகவும் முன்னேறியுள்ளது. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில், 15 சதவீதம் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது. இந்த தொழிற்சாலைகளில் மட்டும் 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இதில், தமிழ்நாடு 10 பில்லியன் டாலர் அந்நிய முதலீடுகளை ஈர்த்து, சுமார் 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மிக முக்கியமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து, பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, பெரும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான செயல்திட்டங்களையும் நேர்த்தியாக வகுத்து வருகிறது.இதற்காக ஆராய்ச்சி, மேம்பாடு, வான்வழி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அரசின் நடவடிக்கைகள், ‘2030ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன்’ என்ற முதல்வரின் பொருளாதார கனவை நிச்சயம் நனவாக்கும். அதற்கு முதல்வரின் 10 நாள் வெளிநாடு பயணம் விதையாக அமையும். தமிழ்நிலத்தின் தொழில் வளத்ைத மேலும் செழுமையாக்கும் இலக்கோடு, முதல்வர் மீண்டும் ஒரு சரித்திர பயணத்தை மேற்கொள்கிறார். இந்த பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்புவது நமக்கான கடமை என்றால் அது மிகையல்ல.
இவ்வாறு அத்தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.