தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதில் இருந்தே மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். அதேபோல் பொதுவெளியில் சனாதன கருத்துக்களைப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். அண்மையில் கூட மகாத்மா காந்தியடிகள் குறித்து சர்ச்சையான கருத்தைக் கூறினார். இதற்கும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது.
மேலும் தமிழ்நாடு அரசின் திட்டங்களில் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி மூக்கை நுழைத்து வருகிறார். குறிப்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமலிருந்து வருகிறார். ஆளுநரின் இந்த அலட்சியப் போக்கை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் எழும் சர்ச்சைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியே காரணம் என ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூகவலைத்தளத்தில், "1857 இல் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் சென்னைப் பல்கலைக்கழகமும் ஒன்று. இதில் கடந்த 5 மாதங்களாகத் துணைவேந்தர் இல்லாமல் உள்ளது.
இதில் ஆளுநருக்கும் -அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விலகல்தான் காரணம். தமிழ்நாட்டில் பல சர்ச்சைகளின் மையமாக ஆளுநர் இருப்பது ஏன்?. பல சர்ச்சைகளுக்கு ஆளுநர்தான் காரணம் என சிலர் கூறுகின்றனர்.நாட்டின் உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான கருத்து இது"என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஓய்வு பெற்றார். இதையடுத்து பல்கலைக்கழக துணை வேந்தருக்கான தேடுதல் குழுவைத் தமிழ்நாடு அரசு நியமித்தது. பின்னர் ஆளுநர் துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கான யுஜிசி பிரதிநிதி அடங்கி குழுவை ஆளுநர் அமைத்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது.
மேலும் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக வழக்குத் தொடுத்தது. இதையடுத்து ஆளுநர் தனது உத்தரவைத் திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.