தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சுபேருக்கு, குடியரசு நாளில் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கியுள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்.
ALT NEWS-ன் இணை நிறுவனரான சுபேர், சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகளை ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தும் பணியை செய்து வருபவர். உண்மையை உரைப்பதாலேயே, பாஜகவின் பகையை சம்பாதித்தவர்.
அண்மையில் ராமர் கோவில் திறப்பை ஒட்டி கூட ஒரு செய்தி பரப்பப்பட்டது. துபாயின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் ராமர் படம் திரையிடப்பட்டது எனவொரு செய்தி! அச்செய்தியில் உண்மையில்லை என்பதை கண்டறிந்த சுபேர், அதற்கான சான்றுகளையும் பதிவிட்டார்.
போலவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம், தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற செய்தி இணையத்தில் வேகமாக பரவியது. அச்செய்தியையும் பொய்யென கண்டுரைத்தார் சுபேர். அச்செய்தியில் இருந்த புகைப்படமும் காணொளியும் தமிழ்நாட்டை சேர்ந்தவை அல்ல என்பதை சான்றுகளுடன் நிறுவினார்.
சுபேர் அம்பலப்படுத்தும் பெரும்பாலான உண்மைகள் பாஜகவுக்கு எதிராக இருப்பது இயல்பு. ஏனெனில் உண்மைக்கும் பாஜகவுக்கும்தான் தொடர்பேதும் கிடையாதே!
எனவே சுபேரின் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்தது பாஜக. அவரை கைது செய்தது.
உச்சநீதிமன்றத்தின் தலையீட்டுக்கு பின், அவருக்கு பிணை வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி இன்னுமே கூட, பாஜகவின் ஆன்லைன் அடியாட்கள் கூட்டம் சுபேரை பற்றி இணையத்தில் அவதூறு பேசுவதையும் கொச்சையாக பேசுவதையும் கட்சி செயல்பாடாக கண்ணும் கருத்துமாக செய்து வருகிறார்கள்.
இத்தகைய பின்னணியில்தான் தமிழ்நாடு அரசு, முகமது சுபேருக்கு விருதளித்து கெளரவம் செய்திருக்கிறது. விருது குறித்து பேசுகையில், “தமிழ்நாடு அரசிடமிருந்து விருது கிடைக்கும் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. குறிப்பாக, குடியரசு நாளில் மத நல்லிணக்கத்துக்கான விருது பெறுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்,” என சுபேர் தெரிவித்துள்ளார்.