கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து இம்மாதம் இறுதிக்குள் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிவசங்கர், "அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் முழுமையாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தனியார் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் சி.எம்.டி.ஏ நிர்வாகம் செய்து கொடுக்கும்.
அதேபோல், SETC பேருந்துகள் இல்லாமல் மற்ற அனைத்து அரசு பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து படிப்படியாகத் தொடங்கி உள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
மேலும், படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதைத் தடுக்கும் வகையில் படிப்படியாக அனைத்து MTC பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்பட உள்ளது. அடுத்த மாதத்திற்குள் புதிய 100 MTC பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. அதோடு மின்சார பேருந்துகள் 100 வாங்குவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.