உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் தற்போது இராமர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இந்த இராமர் கோயில் திறப்பு விழா நாளை (22.01.2024) நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், பாஜக அரசு இந்த கோயிலை அரசியலுக்காக திறக்கிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது.
இந்த சூழலில் நாளை திறக்கப்படவுள்ள இராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிகழ்வுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்காததற்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அரசியல் ஆதாயத்திற்கு இராமர் கோயில் திறக்கப்படுவதாக கூறி பல்வேறு அரசியல் காட்சிகள் இதனை புறக்கணித்து வருகிறது.
இப்படியான சூழலில் இன்று 'தினமலர்' நாளிதழ் தவறான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நாளை அயோத்தி இராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைக்கு பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளதாகவும், இராமர் பெயரில் அன்னதானம் வழங்கவும் அனுமதி மருத்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் உண்மையா? பொய்யா? என்று கூட ஆய்வு செய்யாமல் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இவரது பதிவை தொடர்ந்து இந்த போலியான வதந்தி காட்டுத்தீ போல் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த குற்றச்சாட்டு போலியானது என்று தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபுவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டை திசைத் திருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் இராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை. முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் இருக்கும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது." என்று குறிப்பிட்டுள்ளார்.