15வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில போக்குவரத்து சங்கங்கள் இன்றில் இருந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து பொதுமக்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் போக்குவரத்தை சீராக தமிழ்நாடு அரசு இயக்கி வருகிறது. இதனால் வழக்கம் போல் பொதுமக்கள் தங்களது பணிகளுக்கு எவ்விதமான கஷ்டங்களையும் சந்திக்காமல் பேருந்தில் பயம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 96 மாதகால அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "போக்குவரத்து தொழிலாளர்களுக்காக நீலிகண்ணீர் வடிக்கும் எடப்பாடி.96 மாத காலமாக ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என உங்கள் அறிக்கையிலே சொல்லியிருக்கிறீர்களே, அதை நிறுத்தியதே நீங்கள் தானே !
65 மாத காலம் அகவிலைப்படி கொடுக்காமல் இருந்தது நீங்கள் தானே ! இதை சொல்லி பேருந்தை நிறுத்தினால், மக்கள் தி.மு.க அரசு மீது கோபப்படுவார்கள் எனது உங்கள் கற்பனை. ஆனால் உங்கள் வேடம், உங்கள் அறிக்கையாலேயே கலைந்து விட்டது. மக்கள் உண்மையை அறிவார்கள். மக்களுக்கு இடையூறாக பொய் சொல்லி ஒரு போராட்டம் நடத்துவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.