தமிழ்நாடு

”கண் முன்னே பலன் தரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

மாணவச் செல்வங்கள் படிப்பைப் பாதியில் கைவிடுவதை காலை உணவு திட்டம் தடுத்து நிறுத்தியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

”கண் முன்னே பலன் தரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சி பொறுப்பேற்ற உடன் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அறிவித்தது. பின்னர் இந்த திட்டத்திற்கு என்று தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 15-9-2022 அன்று அண்ணா பிறந்தநாளில் இந்த திட்டத்தை மதுரையில் ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

முதல் கட்டமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 1,545 பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பின்பு 28-2-2023 அன்று இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு, 1,005 நகர்ப்புற மையங்களில் 1,12,883 மாணவர்களுக்கும், 963 கிராமப்புற மையங்களில் 41,225 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள 31,008 அரசு பள்ளிக்கூடங்களிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. மாணவர்களின் பசிப் பிணியை போக்கும் கருணை திட்டமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை பாராட்டி DT Next நாளேடு செய்தி கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய செய்தி என தனது தனது மகிழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படத்தியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "அடித்தட்டு மக்களின் ஏற்றம், எல்லோருக்கும் எல்லாம் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் நமது திராவிட மாடல் அரசு, கல்வியும் சுகாதாரமும் இரு கண்கள் எனப் போற்றி முன்னுரிமை அளித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

”கண் முன்னே பலன் தரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

ஒரு குழந்தைகூட பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிடக்கூடாது, போதிக்கும் வேளையில் ஊன்றிப் பாடங்களைக் கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, நாட்டுக்கே முன்னோடியாக, கடும் நிதிநெருக்கடிக்கு இடையிலும் செயல்படுத்தி வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நாட்டு மக்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் அன்றாடப் பணிச்சுமையைக் குறைத்து இருக்கிறது.

இன்று தினத்தந்தி குழுமத்தின் சார்பில் வெளியாகும் DT Next நாளேட்டில் வந்த செய்தி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கிறது. மாணவச் செல்வங்கள் படிப்பைப் பாதியில் கைவிடுவதை இந்தத் திட்டம் தடுத்து நிறுத்தியது மட்டுமன்றி, பள்ளிக்கூடங்களிலும் சமுதாயத்தில் பல நற்பயன்களுக்கு வித்திட்டு வருகிறது.

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குச் சிற்றுண்டி உண்ட பின், மீதமிருக்கும் உணவு வீணாவதில்லை; மாறாக, ஆறாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில் யார் காலை உணவு சாப்பிடாமல் வந்துள்ளனர் என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு அந்த உணவை வழங்குகின்றனர் என்ற செய்தி அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். காலையில் வேலைக்குச் செல்லும் தனது தாயால் சமைக்க முடியவில்லை என்பதால் பசியோடு பள்ளிக்கு வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன், பள்ளியில் பகிர்ந்தளிக்கப்படும் சிற்றுண்டியை உண்பதாகக் கூறியதைப் படிக்கும்போது நெகிழ்ந்தேன். அவரைப் போல, பசியோடு வரும் பல மாணவர்களும் உணவருந்திய பின் வகுப்புக்குச் செல்கிறார்கள் என்பதைக் கண்டு, ஒரு நல்ல நோக்கத்தோடு செயல்படுத்தப்படும் திட்டம், மேலும் பற்பல சமூக நன்மைகளுக்கு வித்திடுகிறது நிறைவைத் தருகிறது. உணவை வீணாக்காமல், பகிர்ந்தளிக்கும் ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

எத்தனைக் கடினமான சூழ்நிலை இருந்தாலும் நம் வருங்காலத் தலைமுறைக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத் தர வேண்டும் என்ற எனது கனவு, கண் முன்னே பலன் தரும்போது ஏற்படும் மகிழ்ச்சியைச் சொல்லவா வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories