சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர் பட்டி பகுதியில் உள்ள சிவந்தனூர் என்ற பகுதியில் ஏரி மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து இரவு நேரங்களில் லாரிகள் மூலம் மணல் கடத்தபடுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.
அதோடு இந்த சம்பவம் தாரமங்கலம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், அந்தப் பகுதி ஊராட்சி மன்ற தலைவருமான காங்கேயன் என்பவரின் அனுமதியோடு இது நடைபெறுவதாகவும் புகார்கள் எழுந்தன. மேலும் இரவு நேரங்களில் அவரின் முன்னிலையில்தான் ஏரி மண் மற்றும் புறம்போக்கு பகுதியில் உள்ள மணல் லாரி லாரியாக கடத்தப்பட்டு வந்துள்ளது.
இந்த நிகழ்வை அறிந்த பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் நேற்று இரவு மணல் கடத்தப்படுவதாக சொல்லப்படும் பகுதியில் நேரில் சென்று அதனை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மணலை ஏற்றிச் சென்ற லாரியையும் இளைஞர்கள் சிறை பிடித்தனர். அப்போது அங்கு வந்த அதிமுக ஒன்றிய செயலாளர் காங்கேயன், மணலை ஏற்றிச்சென்ற லாரியை பிடித்து வைத்தவர்களில் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் அந்த இளைஞரின் முகத்தில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது. இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் கோபமடைந்து அதிமுக ஒன்றிய செயலாளர் காங்கேயனை ஓட ஓட விரட்டி அடித்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணல் கடத்தலை தடுக்கச் சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக ஒன்றிய செயலாளர் காங்கேயன் மீது பல இடங்களில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.