தமிழ்நாடு

பா.ஜ.கவின் அடியாளாக மாறிவிட்ட ED : அமலாக்கத்துறை மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த விவசாயிகள்!

சாதி பெயரைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

பா.ஜ.கவின் அடியாளாக மாறிவிட்ட ED : அமலாக்கத்துறை மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த விவசாயிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டம் அப்பம்ம சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட காரமடை திட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். இவர்களுக்கு அப்பகுதியில் சுமார் ஆறரை ஏக்கரில் விளைநிலம் அமைந்துள்ளது. இவர்களின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பா.ஜ.கவின் சேலம் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் என்பவர் தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களையும் கொலை மிரட்டல்களையும் விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் காவல் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விவசாயிகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையில் இருந்து சம்மன் ஒன்று வந்தது. விவசாயிகள் இருவரின் சாதி பெயரை குறிப்பிட்டு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் விசாரணை செய்ய வேண்டும் என்றும் நேரில் ஆஜராகவில்லை என்றால், சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் இருவருக்கும் சொந்தமான ஆறரை ஏக்கர் நிலத்தை ஜப்தி செய்வோம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட விவசாயிகள் இருவரும் வழக்கறிஞர் பிரவீனா என்பவரின் உதவியுடன், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். படிக்கத்தெரியாத, வயதான விவசாயிகளுக்கு உதவியாகச்சென்ற வக்கறிஞர் பிரவீனாவை அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் அனுமதிக்காமல், அப்பாவி விவசாயிகள் இருவரையும் உள்ளே அழைத்துச்சென்று விசாரணை என்ற பெயரில் மிரட்டல் விடுத்துள்ளனர். உணவிற்கே வழியில்லாத தங்களுக்கு சொத்து அதிக அளவில் இருப்பதாகவும், பணம் வைத்துள்ளதாகவும் கூறி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தியது வேடிக்கையாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

பா.ஜ.கவின் அடியாளாக மாறிவிட்ட ED : அமலாக்கத்துறை மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த விவசாயிகள்!

இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கிருஷ்ணன் மற்றும் கண்ணையன் ஆகியோர் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும் தங்களது நிலத்தை அபகரிக்கும் எண்ணத்தில் தொடர்ந்து செயல்பட்டு வரும் பா.ஜ.க நிர்வாகி குணசேகரனை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

"விவசாயம் செய்ய முடியாமல் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் நாங்கள் சொத்து குவித்ததாக அமலாக்கத் துறை சமன் அனுப்பி விசாரணை மேற்கொண்டது தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது" என்று விவசாயிகள் வேதனையுடன் பேட்டி கொடுத்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி வரும் பாஜக, தற்போது தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு எதிராகச் செயல்படும் ஏழை எளிய மக்களையும் மிரட்டத் தொடங்கிவிட்டதாக அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறை தற்போது, பாஜகவின் அடியாட்களாகவே மாறிவிட்டதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories