தமிழ்நாடு

ஒடிசா முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

உடல்நலக்குறைவால் காலமான தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர் எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஒடிசா முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 1935-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் எம்.எம்.ராஜேந்திரன். சென்னையில் கல்லூரி படிப்பை முடிந்த இவர், 1957-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாகி உதவி ஆட்சியர், துணை ஆட்சியர் போன்ற பொறுப்புகளை வகித்து 1959 இல் தனது பயிற்சியை வெற்றிகரமாக முடித்து அப்போதைய முதல்வர் காமராஜரின் தொகுதியான சிவகாசியில் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து தனது 29-வது வயதில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரானார்.

அப்போது 1964-ம் ஆண்டு தனுஷ்கோடியில் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தை திறம்பட எதிர்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்தார். தொடர்ந்து தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தபோது தலைமைச் செயலாளரான ராஜேந்திரன், 1989-ம் ஆண்டில் முதலமைச்சராக கலைஞர் வந்த பிறகும் அதே பதவியில் தொடர்ந்து பணியாற்றினார்.

பிறகு 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை ஒடிசா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது அம்மாநிலத்தில் ஏற்பட்ட புயலை திறம்பட எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எம்.ராஜேந்திரனுக்கு சுசீலா என்கிற மனைவியும், 2 மகள்கள், ஒரு மகன் இருக்கும் நிலையில், அண்மைக்காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார்.

ஒடிசா முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

இந்த சூழலில் சிகிச்சை பெற்று வந்த அவர், தனது 88-வது வயதில் கடந்த 23-ம் தேதி (நேற்றைய முன்தினம்) காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில், "எம்.எம்.ராஜேந்திரன் மறைவெய்தினார் என்று அறிந்து மிகவும் வருந்துகிறேன். 1957 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான ராஜேந்திரன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது தனுஷ்கோடி இயற்கைச் சீற்றத்தை திறமையாக கையாண்டார். அந்த அனுபவத்தைக் கொண்டு 1999-ல் ஒடிசா மாநில ஆளுநராக இருந்தபோது புயலை திறம்பட எதிர்கொள்வதில் முக்கியப் பங்காற்றினார்.

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தபோது தலைமைச் செயலாளரான ராஜேந்திரன், 1989-ம் ஆண்டு கருணாநிதி முதல்வரான பின்னும் அப்பதவியில் நீடித்தார். அரசு நிர்வாகத்திலும், அரசியலமைப்புப் பதவிகளிலும் சிறப்பாகவும் நிர்வாகத் திறனோடும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டவர். அவரை இழந்து தவிக்கும் அவரது துணைவியாருக்கும், உறவினர்களுக்கும், அவருடன் பணியாற்றிய அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." ஏன்னு குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஒடிசா முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரன் உடலுக்கு அரசு மரியாதை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

இந்த நிலையில், அவரது உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு பின்வருமாறு : "முன்னாள் ஒடிசா மாநில ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரன் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணை

ஒடிசா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், பெருந்தலைவர் காமராஜர், தமிழினத் தலைவர் கலைஞர் உள்ளிட்ட முதலமைச்சர்களுடன் பணியாற்றியவரும், தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.எம்.ராஜேந்திரன் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

1957ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் தனது பணியைத் தொடங்கி, இராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் ஆட்சித் தலைவராகவும், ஒன்றிய அரசின் செயலாளராகவும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றி இந்திய ஆட்சிப் பணியில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து, ஓய்வுக்குப் பிறகும் ஒடிசா மாநில ஆளுநராக செவ்வனே மக்கள் பணியாற்றியவர் எம்.எம். ராஜேந்திரன் அவர்கள்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அண்ணாரின் மறைவு ஒரு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.எம். ராஜேந்திரன் அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களால் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது சேவைகளைப் போற்றும் வகையில், காவல்துறை மரியாதையுடன் இறுதி நிகழ்வு நடைபெறும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்."

banner

Related Stories

Related Stories