மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் , திருநெல்வேலி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களிலும் பெய்த கனமழையாலும் மக்கள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 100 ஆண்டுகள் இல்லாத வகையில் கனமழை பெய்ததால் தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்த இரண்டு பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்த நிலையில், உடனே மக்களை மீட்க அமைச்சர்கள் மற்றும் அரசு நிர்வாகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதற்கிடையில் மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண நிதி அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ரூ.6000 மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் டிச.19ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2000 கோடியை அவசர நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால் அடுத்தடுத்து 2 பேரிடர்களை சந்தித்த தமிழ்நாட்டிற்கு உடனே நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இந்த சூழலில் நேற்று செய்தியாளரை சந்தித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் வரலாறு காணாத மழையை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று கூறியதோடு, தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். மேலும் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தது குறித்தும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசினார்.
நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுக்கும் நிலையில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி பின்வருமாறு :
"தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பெரிய பாதிப்புகளை சந்தித்துள்ளோம். இதனை சரி செய்ய சிறப்பு பேரிடர் நிவாரண நிதி கோரி முதலமைச்சர் அவர்கள் பிரதமரிடம் நேரில் சந்தித்து நிவாரண நிதி கோரி கோரிக்கை வைத்தார். ஆனால், வழக்கமாக கொடுக்கும் நிதியை மட்டும் ஒன்றிய அரசு இரு தவணையாக ரூ.900 கோடியை கொடுத்துள்ளது.
இந்த நிதி என்பது ஏற்கனவே கொடுப்பதாக கூறிய நிதியே தவிர, பேரிடர் சிறப்பு நிதி அல்ல. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயல். ஈவு இரக்கமற்ற அணுகுமுறையாக உள்ளது. பேரிடர் காலத்தில் மக்கள் மறுவாழ்வை உறுதிப்படுத்த ஒன்றிய அரசுக்கும் பொறுப்பு உள்ளது. ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மாநில அரசே பொறுப்பு என ஒன்றிய அரசு இருக்கிறது.
நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க மாட்டோம் என பேசியுள்ளார். இப்படி கூறுவது, நிதியமைச்சருக்கான அதிகாரமா? என்ற கேள்வி எழுகிறது. நிர்மலா சீதாராமன் தன்னை தானே பிரதமராக எண்ணிக்கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திமுகவிற்கு எதிராக பேசுவதாக நினைத்து கொண்டு தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக பேசியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு விஷயம். பிரதமரிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் பேச நேரம் கேட்டு சென்று எடுத்துரைத்துள்ளார். ஆனால், இந்தியா கூட்டணியில் பங்கேற்க சென்றுள்ளார் என அதனை அரசியலாக்குகின்றனர்.
நாடாளுமன்றத்தில், ஜனநாயகத்தில் பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசு பேரிடரை பேரிடராக பார்க்காதது அரசியல் காழ்ப்புணர்ச்சி செயல். தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் வெள்ள பாதிப்புகளை சரி செய்யும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கொத்து கொத்தாக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்கிறது. உள் நோக்கத்தோடு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவு மோசமான நிகழ்வு நடந்துள்ளது. 2024 தேர்தலில் பொதுமக்கள் பாஜகவை தூக்கி எறிவதே ஒரே தீர்வு."