47 ஆவது சென்னை புத்தகக் காட்சியை ஜனவரி 3 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என பபாசி அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பபாசி நிர்வாகிகள், "47 ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3ம் தேதி மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். துவக்கவிழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொள்கிறார்கள்.
புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மொத்தம் 19 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறுகிறது
ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் நடைபெற உள்ளது. அதேபோல் சர்வதேச புத்தக திருவிழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஜனவரி 16 தொடங்கி 18 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 800க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.
சிறை கைதிகளுக்கான புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், சிறப்புப் பிரிவினர்களுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட சிறப்பு அரங்குகள் கடந்த ஆண்டு போலவே அத்தனை அரங்குகளும் இந்த ஆண்டும் அமைக்கப்பட உள்ளது"என தெரிவித்துள்ளார்.