குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வரும் கனமழை முதல் அதிகனமழை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களிலிருந்து அவர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு அவசரகால உதவிகளை வழங்கிடவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர். கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும்கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பால்வளத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் ஆகிய அமைச்சர்கள் உடனடியாக அனுப்பப்பட்டு, அவர்கள் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, எஸ். ஞானதிரவியம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தி.மு.கவினர் மற்றும் இளைஞர்கள் என பலரும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,கன்னியாகுமரி பகுதியில் நிரந்தரமாக தேசிய பேரிடர் மீட்பு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "பேரிடர் காலங்களில் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க முறையான ஒரு கட்டமைப்பை ஒன்றிய அரசு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாக வைத்து வருகிறோம். ஒகி புயலின் போது இந்த கோரிக்கை மிக அழுத்தமாக முன்வைக்கப்பட்டது. பேரிடர் மீட்புக்குத்தக்க தருணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் முப்படைகள், குறித்த நேரத்தில் வெகு தொலைவில் இருந்து வந்து சேர்வது சவாலாக இருப்பதை கருத்தில் கொண்டு ஒரு நிரந்தர கட்டமைப்பை கன்னியாகுமரி பகுதியில் ஏற்படுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.