தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த 23 கல்லூரிகளின் 3229 மாணவர்களுக்கு பட்டம் வழங்குவதன் அடையாளமாக 981 மாணவர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று பட்டம் வழங்கப்பட்டது. 2-ஆவது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.
அப்போது பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, இசைக் கலைஞர்கள் பி.எம்.சுந்தரம், டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் (கௌரவ டாக்டர்) வழங்கப்பட்டது. அப்போது முதலமைச்சர் கையால் டாக்டர் பட்டம் பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக பாடகி பி.சுசீலா தெரிவித்தார். தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் பி.சுசீலாவின் தீவிர ரசிகன் என்று கூறியதோடு, பாடல் ஒன்றும் பாடி காட்டினார்.
இதைத்தொடர்ந்து பல்கலைக்கழகம் குறித்து அவர் பேசியதாவது, “தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் 2 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இசைக்கும் என் குடும்பத்துக்கும் நெருக்கமான உறவு உண்டு. பாட்டு எழுதுவதிலும், பாடுவதிலும் என் தாத்தா முத்துவேலர் வல்லவர்.
கலைஞர் கவிதைகளுடன் சினிமா பாடல்களும் எழுதி உள்ளார். எல்லா இசை நுணுக்கமும் அவருக்கு தெரியும். இசையை கேட்டவுடன் அதில் சரி எது, தவறு எது என்று கண்டுபிடித்து விடுவார். எனது மாமா சிதம்பரம் ஜெயராமன் சிறந்த பாடகர். இந்தியாவில் இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை இந்த பல்கலைக்கழகத்திற்கு உண்டு.
இந்த பல்கலைக்கழகம் முழுவதும் மாநில அரசு நிதி உதவியுடன் செயல்படுகிறது. மேலும் மாநிலத்தை ஆளும் முதல்வரே வேந்தராக இருக்கும் உரிமையும் இந்த பல்கலைக்கழகத்திற்கு மட்டும்தான் உண்டு. நான் அரசியல் பேசவில்லை; எதார்த்தத்தை பேசுகிறேன்.
முதலமைச்சர்களே வேந்தர்களாக இருந்தால்தான் அந்த பல்கலைக்கழகம் வளர்ச்சி அடையும்; மற்றவர்கள் கையில் இருந்தால் அதன் நோக்கமே சிதைந்துவிடும் என்று உணர்ந்ததால்தான், 2013-ம் ஆண்டிலேயே அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா முடிவு செய்து, இப்பல்கலைக்கு வேந்தராக முதலமைச்சரை அறிவித்தார். இதற்காக அம்மையார் ஜெயலலிதாவை நான் மனமுவந்து பாராட்டுகிறேன்.
பல்கலைக்கழகத்தில் சிறப்பாக செயல்பட அனைத்து பல்கலை.யின் வேந்தர்களாக முதலமைச்சர்களே இருக்க வேண்டும். பல்கலை. துணை வேந்தர் நியமனம் தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கில் உச்ச நீதிமன்றம் மூலம் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்ப்போம். மாநில அரசின் உரிமையை நிலைநாட்டும் வகையில் நீதிபதிகள் நேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒத்திசைவு பட்டியலில் இருந்து, மாநிலப் பட்டியலுக்கு கல்வியை மாற்றினால்தான், எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் உயர்க்கல்வி என்ற இலக்கை மாநிலங்கள் எட்ட முடியும்.
சமூக நீதியை காக்கும் வகையில் இப்பல்கலை., அமைந்துள்ளது. 1997-ல் இதன் உறுப்புக் கல்லூரியான திருவையாறு கல்லூரியை தொடங்கியவர் கலைஞர். மண்ணை ஐந்தாக பிரித்தது போல், திணை அடிப்படையில் பண்ணையும் குறிஞ்சிப் பண், முல்லைப் பண், மருதப் பண், நெய்தல் பண், பாலைப் பண் என்று ஐந்தாக பிரித்தனர் தமிழர்கள். இயல் இசை நாடகத்தமிழ் இணைந்ததே தமிழ் மொழி.
முதன்முறையாக இப்பல்கலையில் இன்று ஆராய்ச்சிப் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்திற்கான அரசு மானியம் ரூ.3 கோடி அடுத்த நிதி ஆண்டில் இருந்து வழங்கப்படும். ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகம் அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்றார்.