செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்தவர் முனியன். 85 வயது முதியவரான இவர், தனது 78 வயது மனைவி விஜயலட்சுமி என்பவருடன் வசித்து வருகிறார். எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தவறி விழுந்து காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் இவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சூழலில் இவர் தனது வீட்டில் மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் இவரை அவரது மனைவி கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அந்த வகையில் சம்பவத்தன்று முதியவர் முனியன் புகைபிடிக்க எண்ணியுள்ளார். அதன்படி தனது சிகரெட்டை எடுத்து, படுக்கையில் அமர்ந்துகொண்டே தீப்பெட்டியை வைத்து பற்ற வைத்துள்ளார்.
அப்போது கை தவறி கீழே விழவே, படுக்கையில் தீக்குச்சியை இருந்த தீ குப்பென்று பற்றிக்கொண்டது. தீ பற்றி எரிவதை கண்டும் கால் முறிவு காரணமாக தப்பிக்க முடியாமல் திணறிய முதியவர் கத்தி கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். எனினும் அவரது இடுப்பு பகுதி முழுவதுமாக எரிய தொடங்கியது. தொடர்ந்து அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்து விட்டார். இதையடுத்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.