மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் தற்கொலை ஏராளமான செய்துகொண்டுள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகமே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.
எனினும் ஒன்றிய அரசு நீட் தேர்வை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடி வருகிறது. இதற்காக மாநாடு, ஆர்ப்பாட்டம், போராட்டம் என அனைத்தும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த மாதம் 21-ம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் திமுகவின் மாணவரணி, இளைஞரணி, மருத்துவரணி சார்பில் தொடங்கப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 'நீட் விலக்கு நம் இலக்கு' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த கையெழுத்து இயக்கத்தில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் பெறப்படவுள்ளது.
இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளதாக திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்த கையெழுத்து இயக்கத்தில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கையெழுத்திட்டு நீட்டுக்கு எதிராக தங்கள் எண்ணத்தை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று அசோக் நகரில் விசிக தலைவர் திருமாவளவன், அக்கட்சி எம்.பி - எம்.எல்.ஏ-க்களிடம் நீட் விலக்கிற்கான கையெழுத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெற்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பின்வருமாறு :
"நீட் விலக்கு நம் இலக்கு என்ற இந்த மாபெரும் கையெழுத்து இயக்கத்தை 15 நாட்களுக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார். ஆளுநரிடம் தொடர் வலியுறுத்தலுக்குப் பிறகு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனிதாவில் தொடங்கி இன்று வரை 22 பேர் மரணம் அடைந்தனர். 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 10 லட்சம் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளது. சமூக வலைதள மூலமாக மூன்றரை லட்சம் பேர் மற்றும் நேரடியாக ஆறரை லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
தேர்தல் வாக்குறுதியான நீட் விலக்கு பெரும்வரை திமுக தொடர்ந்து போராடும். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சித் தலைவரை சந்தித்து ஆதரவு கோரினோம். இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை சந்தித்து ஆதரவு கோரி கையொப்பம் பெற்றுள்ளோம் என்றார்.
இது ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றால் அனைத்து பொதுமக்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும் எனக்கு கோரிக்கை விடுத்தார். அனைத்து இயக்கத்தினரும் நான் அழைப்பு விடுப்பதாகவும் அனைவரையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். நீதிமன்றம் பள்ளி குழந்தைகள் கையொப்பம் வாங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. அதிமுகவினர் ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு உள்ளே வந்தது இது திமுக பிரச்னையோ இளைஞரணி பிரச்சனையோ இல்லை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களின் பிரச்னை. எனவே அதிமுகவினரும் ஆதரவு தர வேண்டும். பல மாநிலங்களில் இந்த நீட் பிரச்சினை இப்பொழுதுதான் தெரிய வந்துள்ளது. பல மாநிலங்களிலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்." என்றார்.
தொடர்ந்து சனாதன பிரச்னை குறித்து நீதிமன்ற கருத்திற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "என்னுடைய கொள்கையிலிருந்து நான் மாறுபட போவதில்லை. பெரியார், அண்ணா, அம்பேத்கர் பேசியதை தான் நான் பேசியுள்ளேன். சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறேன். ராகுல் காந்தி தமிழ்நாட்டில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஒவ்வொரு மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப நீட் தேர்வு அனுமதிக்கப்படும் இல்லையென்றால் நீட் விலக்கு அளிக்கப்படும்" என்றார்.