விடுதலைப்போராட்ட வீரர், தமிழ்நாடு அரசால் தகைசால் தமிழர் விருது பெற்ற சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்காததைக் கண்டித்து மதுரையில் நாளை நடைபெறும் காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, "மதுரையில் நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவைத் துணைவேந்தர் என்ற முறையில் புறக்கணிக்கிறேன். விடுதலைப்போராட்ட வீரர் சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவிப்பதே இதற்குக் காரணம்.
சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசும், பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றமும் முடிவெடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த கோப்பில் கையெழுத்து இடாமல் இருக்கிறார். ஆளுநருக்கு சங்கரய்யா குறித்த வரலாறு தெரியவில்லை என்றால் கேட்டிருக்க வேண்டும்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 5 ஆண்டுகள் சிறையிலிருந்தவர் சங்கரய்யா. மேலும் பலபோராட்டங்கள் நடத்தி 4 ஆண்டுகள் சிறை என 9 ஆண்டுகள் சிறையிலிருந்துள்ளார். தனது 102 வயதிலும் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். அவரை கவுரவிக்கும் விதமாகத் தமிழ்நாடு அரசால் தகைசால் தமிழர் விருது வழங்கியது.
மேலும் அவருக்குக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான கோப்பில் கையெழுத்துப் போட ஆளுநர் மறுத்துள்ளார். தமிழ்நாட்டு ஆளுநர் எந்த சட்டத்தையும் மதிப்பதில்லை. சமூக நீதி பேசுபவர்களை ஆளுநருக்குப் பிடிக்கவில்லை அதனால் தான் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் கொடுக்கக் கூடாது என்று நினைக்கிறார்.
சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்காமல் இருப்பதற்கான காரணத்தை ஆளுநரால் விளக்க முடியுமா?. ஆளுநர் ஆர்.என்.ரவி நடிப்பு சுதேசியாக இருந்து வருகிறார். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க விற்கு ஆதரவாகத் தான் ஆளுநர் இவ்வாறு நடந்துகொள்கிறார்.
தமிழ்நாடு அரசின் மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான் சங்கரய்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்காததைக் கண்டித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் புறக்கணிக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.