ஆர்.என்.ரவி தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மாநில அரசோடு நிழல் யுத்தம் செய்யும் போக்கினை தொடர்வது வன்மையான கண்டனத்திற்கு உரியது என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
சுதந்திரப் போராட்ட வீரரும், முதுபெரும் அரசியல் தலைவருமான அய்யா என்.சங்கரய்யா அவர்களுக்கு, மதுரை காமராசர் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் வழங்க முடிவு செய்திருந்த கோப்பில், ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட மறுத்த செய்தி அனைவரின் பலத்த கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விடுதலைக்கு பின்பு மூன்று ஆண்டுகள் தலைமறைவு போராட்ட வாழ்க்கையால் கல்லூரிக் கல்வி பாதிப்பு என பல்வேறு தியாகங்களைச் செய்த 101 வயது நிரம்பிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான அய்யா சங்கரய்யா அவர்களை தமிழ்நாடு அரசின் முதல்வர் அண்ணன் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘தகைசால் தமிழர்’ விருது அளித்து பாராட்டியதை நாம் எந்நாளும் மறவோம்!
அத்தகைய தியாக சீலருக்கு, நவம்பர் 2 ஆம் தேதி நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவில், கௌரவ டாக்டர் பட்டம் வழங்க காமராசர் பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழு முடிவெடுத்துள்ளது. நவம்பர் 3 ஆம் தேதி, அய்யா சங்கராய்யா அவர்களை நேரில் சந்தித்து டாக்டர் பட்டம் வழங்குவது என்றும் பல்கலைக் கழகம் முடிவு செய்தது.
தமிழ்நாடு அரசும் இதனை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு எதிராக நடந்துகொள்வது மன்னிக்க முடியாத மாபெரும் தவறு ஆகும்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராகவும், தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகளையும், அரசின் முற்போக்கான திட்டங்களையும் முட்டுக்கட்டை போட்டு தடுத்து நிறுத்தி, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக சட்டவிரோதமாகச் செயல்படும் ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பிலிருந்து அகற்ற வேண்டும் என்ற அரை கோடி தமிழர்கள் விருப்பத்தை குடியரசுத் தவைரிடம் முறையிட்டுள்ளது மறுமலர்ச்சி தி.மு.க.!
இதன் பின்னரும் ஆர்.என்.ரவி தன் போக்கை மாற்றிக் கொள்ளாமல் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மாநில அரசோடு நிழல் யுத்தம் செய்யும் போக்கினை தொடர்வது வன்மையான கண்டனத்திற்கு உரியது.
ஆளுநர் ரவி இனியாவது தனது தவறான போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அதன் முதல் நடவடிக்கையாக மூத்த தலைவர் சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.