தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காரில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மறைமலைநகர் செல்லும் வழியில் தீபா என்ற பெண் இலவச பேருந்து திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தியதற்காக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தனது மகன் சந்தோஷ் உங்களை நேரில் சந்திக்க ஆசைப்படுவதாகவும், உங்களுக்கு கொடுக்கும்படி சாக்லேட் வழங்கியதாகவும் கூறி முதலமைச்சரிடம் சாக்லேட்டை வழங்கினார். இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்போடு ஏற்றுக்கொண்டார்.
பின்னர் இன்று கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் இரண்டாம் நாள் ஆய்வுக்கூட்டத்திற்கு பங்கேற்பதற்காகச் செல்லும் வழியில் சிறுவன் சந்தோஷை நேரில் சந்தித்து 'திருக்குறள் உரை' புத்தகத்தை வழங்கினார்.
தனது நீண்டநாள் ஆசை நிறைவேறியதை அடுத்து மகிழ்ச்சியுடன் சந்தோஷ் கூறுகையில், "முதலமைச்சரைச் சந்திக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. நேற்று அவரை சந்திக்க முயற்சி செய்தும் சந்திக்க முடியவில்லை. இதை அறிந்த முதலமைச்சரே இன்று தன்னை நேரில் அழைத்து பரிசு வழங்கி சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.