மதுரை, தேனி - திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், புதுகோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, தஞ்சாவூர், சிவகங்கை உள்பட 14 மாவட்டங்களில் 20 இடங்களில் விஜயதசமி நாளான அக். 22-ல் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "தென் தமிழகத்தில் 20 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அனுமதி கோரி அளித்த மனுக்களில் ஊர்வலம் எங்கு தொடங்கி எங்கு முடியும், யார் யார் பங்கேற்கிறார்கள், ஊர்வலப் பாதையில் பிற மத வழிபாடு ஸ்தலங்கள் உள்ளதா என்ற தகவல்கள் இல்லை.
ஆர்.எஸ்.எஸ் துண்டு பிரசுரங்களில் சர்ச்சைக்குரிய பிரிவினையை தூண்டும் வாசகங்கள் உள்ளன. இதனால் ஊர்வலத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும். ஆர்.எஸ்.எஸ். என்பது பதிவு செய்யப்பட்ட அமைப்பா? எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது? அல்லது ஆர்.எஸ்.எஸ். ஒரு அரசியல் கட்சி எனில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா? ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் யார் பொறுப்பேற்பது?. எனவே ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் மாவட்டம் வாரியாக யார் யார் பங்கேற்கிறார்கள்? ஊர்வலம் எங்கு ஆரம்பித்து எங்கு முடியும்? என்ற முழு விபரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.