தற்போதுள்ள இணைய உலகில் அனைத்தும் இணையம் சார்ந்தே இருக்கிறது. இதனால் மோசடிகளும் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. ஆன்லைன் மூலம் வேலை, வங்கியில் இருந்து பேசுவதாக ஓடிபி கேட்பது, மொபைலை ஹேக் செய்வது போன்ற பல மோசடிகளில் மோசடி கும்பல் ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் அரங்கேறி வரும் இந்த குற்றங்களுக்கு அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில் இதுபோல் சைபர் கிரைம் குற்றங்களுக்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசாரும் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசாரின் நடவடிக்கை காரணமாக பலரும் தாங்கள் இழந்த பணத்தை திரும்ப பெற்றுள்ளனர். இந்த சூழலில் கடந்த 10 மாதங்களில் மட்டும் தமிழ்நாடு மக்கள் சைபர் கிரைம் மோசடிகளில் சிக்கி ரூ.425 கோடி வரை பணத்தை இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 மாதங்களில் மட்டும் தமிழ்நாடு சைபர் கிரைம் மோசடிகளில் சிக்கி ரூ.425 கோடி வரை பணத்தை பொதுமக்கள் இழந்துள்ளதாகவும், இதில் இழந்த ரூ.338 கோடி பணத்தை தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் வங்கி மூலமாக முடக்கி, உரியவரிடம் திரும்ப ஒப்படைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 65,426 சைபர் கிரைம் புகார்கள் பெறப்பட்ட நிலையில், அந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இதுவரை சுமார் 332 குற்றவாளிகளை போலீசார் கைது செய்ததாகவும் தெரியவந்துள்ளது. அதோடு 1930 என்ற உதவி எண் மூலமாக இந்தாண்டு மட்டும் 21,760 சைபர் கிரைம் புகார் அழைப்புகள் வந்துள்ளதாகவும், சட்டவிரோதமாக மற்றும் மோசடி செயலுக்கு பயன்படுத்திய 29,530 சிம்கார்டுகளை பிளாக் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1.4.2021 முதல் 16.10.2023 வரை 42 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்துள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 மாதகளில் மட்டும் சைபர் கிரைம் மோசடிகளில் சிக்கி சுமார் ரூ.425 கோடி பணத்தை பொதுமக்கள் இழந்துள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.