மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க 2018ம் ஆண்டு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து 2019ம் ஆண்டு எஸ்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்குப் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
அப்போது அங்கு வைக்கப்பட்ட ஒற்றை செங்கல்லை தவிர வேறு எந்த பணியையும் ஒன்றிய அரசு இதுவரை தொடங்காமல் உள்ளது. மேலும் இந்த ஒற்றை செங்கல்லுக்காக மட்டும் சுற்றுச்சுவறை அமைத்துள்ளது. இந்த இரண்டு வேலைகளைத் தவிர வேறு எந்த கட்டுமான பணிகளையும் ஒன்றிய அரசு தொடங்காமல் இருந்துவருகிறது.
இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் ஒன்றிய அரசு எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலின் போது கூட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தின் முக்கியமானதாக ஒற்றை செங்கல் தான் இருந்தது.
2022ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த ஜே.பி. நட்டா மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% முடிந்து விட்டதாகக் கூறியது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 95% வேலை முடிந்த எய்ம்ஸ் எங்கே? என அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.
தற்போது நடந்து முடிந்த நாடாளுமுன்ற கூட்டத் தொடரில் ஒன்றிய நிதியமைச்சர் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாவதற்குத் தமிழ்நாடு அரசுதான் காரணம் என தங்களது தவறை மறைக்கப் பார்த்தார். ஆனால் தி.மு.க எம்.பிக்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தபின் அமைதியாக அமர்ந்துவிட்டார்.
அண்மையில், 5 வருடங்கள் கழித்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு டெண்டரை ஒன்றிய அரசு வெளியிட்டது. இது ஒன்றிய அரசு இந்நாள்வரை பேசி வந்த பொய்யை வெளிச்சம் போட்டுக் காட்டியது. தற்போது டெண்டர் விண்ணப்ப கால அவகாசத்தை மூன்றாவது முறையாக ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது.
இந்நிலையில், எய்ம்ஸ் டெண்டருக்கே இத்தனை கால தாமதம் ஆகிறது என்றால் மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில், "மதுரையில் எஸ்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கான முன் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான விண்ணப்ப கால அவகாசத்தை மூன்றாவது முறையாக நீட்டித்துள்ளது ஒன்றிய அரசு.
ஒன்றிய அரசு ஒற்றை செங்கலை வைத்து நான்கு ஆண்டுகள் கடந்த பிறகும் கட்டுமானப் பணிக்காக முன் டெண்டருக்கே இத்தனை கால தாமதம் ஆகிறது என்றால் மருத்துவமனையை கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகளாகும்?. எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தாமதப்படுத்தி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்" என தெரிவித்தள்ளார்.