தமிழ்நாடு

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ்ஒளிக்கு சிலை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ் ஒளிக்கு மார்பளவு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ்ஒளிக்கு சிலை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழுவினர் கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் பிறந்த நூற்றாண்டினை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனர்.

கவிஞர் தமிழ்ஒளி செப்டம்பர் 29, 1924-ஆம் ஆண்டு குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். விசயரங்கம் என்பது தமிழ்ஒளியின் இயற்பெயர் ஆகும். பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர். தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் சாடி கவிதைகள் எழுதியவர்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் கவிஞர் தமிழ்ஒளிக்கு சிலை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்ஒளியின் கவிதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. தொடக்கக் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே தினத்தை வரவேற்றுப் பாடினார். தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலோர், ஒடுக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களாகவே இருந்தார்கள். இடதுசாரி சிந்தனையுள்ள தமது படைப்பாக்கங்களில் கவிஞர் தமிழ்ஒளி சாதியத்தையும் விளிம்புநிலை மக்களின் விடுதலையையும் பாடினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார்.

இந்நிலையில் கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நூற்றாண்டினை முன்னிட்டு கவிஞர் தமிழ்ஒளி அவர்களுக்கு தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மார்பளவு சிலை அமைக்கப்படும். மேலும் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் 50 இலட்சம் ரூபாய் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தி, கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories