உலகளவில் செஸ் விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் இருவருக்கும் சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் வீரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பள்ளி நிர்வாகம் சார்பில் தலா ரூ. 20 லட்சம் காசோலையை பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகிய இருவருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடரின் துவக்க விழா மற்றும் நிறைவு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதுபோல் இந்த விழாவும் நடைபெறுகிறது.
தினந்தோறும் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் குறித்த செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. பிரக்ஞானந்தா வெற்றி அவரின் தனிப்பட்ட வெற்றி அல்ல. அவருடைய குடும்பத்திற்குக் கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டிற்குக் கிடைத்த வெற்றி. இந்தியாவின் நம்பர் 1 வீரராக குகேஷ் இன்று உள்ளார்.
உலக அளவில் சாதனை படைத்துள்ள இவர்கள் இருவரும் தங்கள் வெற்றிகளைக் கொண்டாடவில்லை என்றாலும் நாம் கொண்டாடுவோம். அடுத்தடுத்து பல சாதனைகளை இவர்கள் படைக்க வேண்டும். தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு உழைத்து வருகிறது. இந்த நேரத்தில் தமிழ்நாடுதான் செஸ் போட்டியின் தலைநகரம் என்பதை இவர்கள் இருவரும் நிரூபித்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.