கடந்த அதிமுக ஆட்சியில், மங்களூர்- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் முதல் அடுக்கம்பாறை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வரை தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி, சாலையின் இருபுறமும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கான நடைபாதை மற்றும் தடுப்பு வேலி அமைக்க ₹35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனை முதல் காட்பாடி ரயில்வே நிலையம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்தது. தொடர்ந்து சாலையின் இருபுறமும் நடைபாதை மற்றும் தடுப்பு வேலி அமைக்கும் பணிகள் கடந்த 2019-2021ம் ஆண்டு வரை நடந்தது. இந்த பணிகளை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சேர்ந்த சுகன்யா கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனம் மேற்கொண்டு வந்தது.
அப்போது, தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளராக இருந்த பழனிசாமி, உதவி கோட்ட பொறியாளர் தியாகு, உதவி பொறியாளர் வேதவள்ளி ஆகியோர் சரிவர ஆய்வு செய்யாமல், முடிக்காத பணிக்கு, ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கியதாக புகார் எழுந்தது.இதுகுறித்து வேலூர் விஜிலென்ஸ் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர்.
இதில் ₹1.11 கோடி முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. இதற்கிடையே பழனிசாமி கடந்த ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். எனினும் வேலூர் விஜிலென்ஸ் போலீசார் ஓய்வு பெற்ற கோட்ட பொறியாளர் பழனிசாமி, உதவி கோட்ட பொறியாளர் தியாகு, உதவி பொறியாளர் வேதவள்ளி, மற்றும் ஒப்பந்த நிறுவனம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், பாகாயம் முதல் அடுக்கம்பாறை வரை சாலையின் இருபுறமும் நடைபாதையில் 2.1 மீட்டருக்கு டைல்ஸ் கற்கள் பதிக்க வேண்டும். ஆனால் 0.90 மீட்டர் அகலத்திற்கு டைல்ஸ் கற்கள் பதித்து, ₹67 லட்சத்து 58 ஆயிரத்து 442 அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளனர். மேலும் நடைபாதையில் தடுப்பு வேலி அமைப்பதற்கான இரும்பு கம்பிகளில் குறிப்பிட்ட உயரத்திற்கு பதிலாக குறைந்த அளவிலான இரும்பு கம்பி அமைத்து, ₹43 லட்சத்து 45 ஆயிரத்து 88 என மொத்தம் ₹1 கோடியே 11 லட்சத்து 3 ஆயிரத்து 530 மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, விஜிலென்ஸ் போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை மதுரை, விருதுநகர், மற்றும் சென்னை, திருவண்ணாமலையில் தலா 2 இடங்களிலும் என மொத்தம் 6 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் தேசிய நெடுஞ்சாலை பணியில் நடந்த முறைகேட்டில் அதிகாரிகள் சிக்கி உள்ள விவகாரம் வேலூர் சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.