நூறு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரிய வழக்கில், கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி தரப்பில் எழுப்பிய 17 கேள்விகளுக்கு 10 நாட்களில் பதிலளிக்கும்படி ஜீ மீடியா கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் கூறியதாக, ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா கார்ப்பரேஷன் உள்ளிட்டோருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, 2014 ம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். நூறு கோடி ரூபாய் மானநஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக, ஜீ தொலைக்காட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், குற்றச்சாட்டுக்களுக்கு குறிப்பிட்டு பதிலளிக்கவில்லை எனக் கூறி, 17 கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு உத்தரவிடக் கோரி தோனி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, 17 கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி ஜீ தொலைக்காட்சி நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஜீ தொலைக்காட்சி நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஜீ நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, சர்வதேச அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான தோனிக்கு எதிராக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி செய்தியாக வெளியிடும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அந்த குற்றச்சாட்டுகளில் துளியளவும் சந்தேகம் இல்லை என்பதை அறிந்திருக்க வேண்டும் என்றும், ஐபிஎஸ் சூதாட்டத்தில் சம்பந்தப்பட்டிருப்பாக நீதிபதி முட்கல் குழுவும் கூறவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுவை பொறுத்தவரை, ஜீ நிறுவனத்திடம் கேட்கப்பட்ட கேள்விகள் குறுக்குவிசாரணை தான் என்றும், ஆதாரங்களுக்ககத்தான் இந்த கேள்விகள் அனுப்பப்பட்டுள்ளதால், தனி நீதிபதி உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தோனி தரப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு 10 நாட்களில் பதிலளிக்க வேண்டுமென ஜீ தொலைக்காட்சி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்