நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. பூமியின் நீள்வட்டப் பாதையில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3ன் உயரம் 5 கட்டங்களாக படிப்படியாக உயர்த்தப்பட்டு, ஆகஸ்ட் 1ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி உந்தப்பட்டது.
பின்னர் ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவின் சுற்று வட்ட பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. ஆகஸ்ட் 17ஆம் தேதி உந்துவிசைக் கலனிலிருந்து விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டது. ஏற்கனவே நிலவின் சுற்றுப்பாதையில் இயங்கி வரும் சந்திரயான் 2-ன் ஆர்பிட்டரின் தகவல் தொடர்பு அமைப்புடன் விக்ரம் லேண்டர் இணைக்கப்பட்டது. பின்னர் லேண்டரின் உயரம் படிப்படியாகக் குறைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றி கரமாக தரையிறங்கியது. இந்த வரலாற்று வெற்றியை நாடே கொண்டாடியது. இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தவர் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான் 3 விண்கலத்தின் திட்ட இயக்குனர் வீர முத்துவேல். இவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பழனிவேல். இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வீர முத்துவேல் விழுப்புரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
அப்போது அவருக்கு இயந்திரவியல் மீது ஆர்வம் கொண்டதால் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ படித்துள்ளார். பிறகு பொறியியல் கல்லூரியில் சேர்ந்துபடித்துள்ளார். பின்னர் சென்னை ஐஐடியில் ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஏரோ ஸ்பேஸ் துறையில் ஆர்வம் கொண்ட அவர் ஐஐயில் பல ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த ஆய்வுகள் தான் அவரை இஸ்ரோவிற்குள் நுழையக் காரணமாக இருந்துள்ளது.
2014ம் ஆண்டு விண்கலத்தின் மின்னணு தொகுப்பில் அதிர்வுகளை கட்டுப்படுத்துவதற்கான முறை குறித்து ஆய்வு கட்டுரை ஒன்றை இஸ்ரோவிற்கு அனுப்பினார். இந்த கட்டுரைதான் அவரை சந்திரயான் 3 ல் திட்ட இயக்குநராக இருக்க காரணமாக இருந்தது.
நிலவில் லேண்டாரை எப்படி தரையிறக்குவது என்பது குறித்த அவரது ஆய்வு அறிக்கையை பயன்படுத்திய சந்திராயன் 3 விக்ரம் லேண்டார் வடிவமைக்கப்பட்டது. தற்போது வீர முத்துவேலின் முழு ஈடுபாட்டில் நிலவில் கால்பதித்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.