மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும், இன்று மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நடைபெற்று வருகிறது. தி.மு.கழக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணிகள் கூட்டாக நடத்தும் போரட்டத்தில் பலரும் பங்கேற்று வருகின்றனர்.
அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவர் அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.
அப்போது மேடையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ட் தேர்வால் மக்கள் விடும் சாபத்தால் ஒன்றிய அரசு வீழும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேடையில் பேசிய அவர், “உதயநிதி தலைமை தாங்கி இருக்கும் நிகழ்சியில் கலந்து கொண்டு உங்களை வாழ்த்தும் வாய்ப்பு முதல் முறையாக எனக்கு ஏற்பட்டுள்ளது. 53 ஆண்டு காலம் தலைவரோட இருந்தவன் நான், அவரோட நான் பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொண்டு அவரை வாழ்த்தி இருக்கிறேன்.
இப்போது நான் திமுக இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி ஆகிய அணியில் இல்லையென்றாலும், நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய அரசையும், ஆளுநரையும் கண்டித்து நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்றுள்ளேன். ஆதிக்க கார்களால் அமல்படுத்தப்பட நீட் தேர்வை எதிர்த்து நடக்கும் போராட்டம் இது. இளம் மாணவர்களை நிமிர விடாமல், ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் மருத்துவராக மாறும் வாய்ப்பை இழந்து இருக்கிறார்கள்.
நீட் தேர்வுக்கு எதிராக எத்தனையோ இளம் சிட்டுக்கள் தங்களது இன்னுயிரை மாய்த்து கொண்டு உள்ளனர். போராட்ட நிலைகளிலேயே பெரிய நிலை உயிரை மாய்த்துக் கொள்வதுதான். இந்தி திணிப்பை எதிர்த்து கழகத்தில் பலபேர் உயிர் நீத்துள்ளார்கள். அதேபோன்று இன்று நீட் தேர்வை எதிர்த்து இளம் சிட்டுக்கள் பலர் உயிரை மாய்த்துள்ளார்கள். அதனைப்பற்றி ஒன்றிய அரசுக்கு கவலைப்படுவதாக தெரியவில்லை.
ஒட்டுமொத்த இந்தியாவிலேயே நாம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம்; ஏனென்றால், இது எதிர்காலத்தை சீரழிக்கும் என்ற வருங்கால சிந்தனை நமக்கு உண்டு. இந்தி திணிப்பில் உயிரிழந்தவர்கள் விட்ட சாபத்தால் அன்றைய ஒன்றிய ஆட்சி வீழ்ந்தது. அந்த வகையில் இன்று நீட் தேர்வால் மக்கள் விடும் சாபத்தால் ஒன்றிய அரசு வீழும்.
நீட் தேர்வு ஒழிந்தது என்ற வரலாறு சரித்திரத்தில் இடம் பெறும். அதை செய்யும் ஆற்றல் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது. நான் 3 தலைமுறையை பார்த்தவன்; உதயநிதியால் தான் முடியும் என்று சொல்லி இருக்கிறேன். அமைச்சர் உதயநிதி தலைமையின் கீழ் நீட் தேர்வு ஒழிந்தது என்ற நிலை உருவாகும்.” என்றார்.