விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவராக வி.ஏ.டி கலிவரதன் என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த காலங்களில் பா.ஜ.கவில் உள்ள பெண் நிர்வாகிகளிடம் ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கி வந்தார்.
இவர் மீதான புகார்கள் அதிகம் வந்ததால் கடந்த ஆண்டு இவரது மாவட்ட தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பின்னர் வி.ஏ.டி கலிவரதன் விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதற்கு பா.ஜ.க நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் வி.ஏ. வி கலிவரதன் பா.ஜ.கவில் இருக்கும் நிர்வாகிகளுக்கு ஒன்னுமே தெரியாது என்று பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தலைமை இடத்திற்குப் புகார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த பா.ஜ.க தொண்டர்கள் விழுப்புரம் எல்லிச்சத்திரம் சாலையிலுள்ள கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோதே, எதுவுமே தெரியாததுபோல் வி.ஏ.டி கலிவரதன் கட்சி அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.