தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சிவகிரியில் வாசுதேவ நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தலைமை கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ராஜா எம்.எல்.ஏ உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அதிகார அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறார். அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்குத்தான் உண்டு. ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
ஆனால் அவர் தி.மு.க அரசுக்கு எதிராக வேண்டும் என்றே செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் எந்த ஆளுநர் வந்தாலும் நமது முதலமைச்சரை ஒன்றும் செய்ய முடியாது. தி.மு.க போட்ட வழக்குகள் ஒருபோதும் தோற்றது கிடையாது. இந்த மாத இறுதிக்குள் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என் ரவியை ஒன்றிய அரசு நீக்கம் செய்யும். புதிய ஆளுநரை ஒன்றிய அரசே நியமனம் செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.