தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள கணேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். விவசாயியான இவருக்கு போதுமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு சூர்யா, சுகன் என்ற 2 மகன்களும், நாகஜோதி என்ற மகளும் உள்ளனர். நாகஜோதி திருமணமாகி, வெளியூரில் கணவருடன் வசித்து வருகிறார்.
அதேபோல் சூர்யா திருமணமாகி பெற்றோருடன் ஒரே வீட்டில் குடியிருந்து வரும் நிலையில், சுகன் கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் நேற்று காலை பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினரிடம் போதுமணி தெரிவித்தார். மேலும் அவர் கதறி அழுதுகொண்டே கூறியதால் நம்பிய உறவினர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து கண்டமனூர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த பாலமுருகனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவரது கழுத்து மற்றும் உடலில் காயங்கள் இருந்தன. பின்னர் அவரது உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.
பாலமுருகனின் இறப்பில் சந்தேகமடைந்த போலீசார் அவரது மனைவி, மகன்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் 3 பேரும் சேர்ந்து பாலமுருகனின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தததாக ஒப்பு கொண்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், மது பழக்கத்திற்கு அடிமையான பாலமுருகன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி போதுமணி, மகன் சூர்யாவுடன் தகராறு செய்து வந்தார். குடும்பத்தினர் பலமுறை கண்டித்தும் பாலமுருகன் மதுப்பழக்கத்தை கைவிடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மனைவி, மகன்கள் 2 பேரும் சேர்ந்து பாலமுருகனை தாக்கி கீழே தள்ளி கழுத்தை நெறுத்து கொலை செய்து உள்ளனர்.
பின்னர் இந்த கொலையை மறைக்க தற்கொலை நாடகத்தை நடத்த திட்டமிட்டு, அதன்படி அரங்கேற்றினர். இதையடுத்து ஒன்றும் நடக்காதது போல் இருந்த 3 பேரும் நேற்று காலையில் பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினரிடம் நாடகமாடி உள்ளனர் என்று தெரிவித்தனர். மனைவியே தனது 2 மகன்களுடன் சேர்ந்து கணவரை கொலை செய்து, தற்கொலை நாடகமாடிய சம்பவம் தேனியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.