ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவில்பாளையம் பகுதியில் 'இதயம் காப்போம்' என்ற பெயரில் இரண்டு கோடி ரூபாய் செலவில் அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் மருத்துவமனை பேருந்து வாகனம் மூலமாக மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமினை தன்னார்வ தொண்டு நிறுவன (ரோட்டரி சங்கம்) மண்டல தலைவர் மருத்துவர் சகாதேவன் முன்னிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை அமைச்சர் சாமிநாதன் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "நமது முதலமைச்சர் அகழ்வாராய்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து கீழடி போன்றவை அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வருகிறது. தமிழ்நாடு அரசு அகழாய்வு பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. கொடுமணல் அகழாய்வு பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த அரங்கு அமைக்கப்படவுள்ளது.
திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக டிக்கெட் விற்பனை செய்து கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் அந்த புகாரின் மீது விசாரித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அது யாராக இருந்தாலும் சரி, எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் நினைவு இடம் மணி மண்டபம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு நிறைவடையும் பணியில் உள்ளது. அந்த இடத்தில் சில குடியிருப்புகள் இருக்கிறது. அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்ட பின்பு மணிமண்டபம் கட்டுமான பணிகள் நடைபெறும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு, பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு நான்கு கூட்டம் நடைபெற்றுள்ளது. பத்திரிகையாளர் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டைகள் நான்கு மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இனி படிப்படியாக எல்லா மாவட்டத்திலும் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.