தற்போது தமிழ்நாட்டின் தலைமை செயலாளராக இருப்பவர் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். கடந்த 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றத்தில் இருந்தே, தமிழ்நாடு அரசு துறைகளின் அதிகாரிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அதில் ஒன்று தான் தலைமை செயலாளர் பதவி நியமனம்.
இந்த பதவியில் இறையன்பு ஐ.ஏ.எஸ்-ஐ நியமனம் செய்தது தமிழ்நாடு அரசு. முன்னாள் முதல்வர் கலைஞரின் தனி செயலாளராக இருந்த இறையன்பு, தான் தலைமை செயலாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட பிறகு பல்வேறு நடவடிவக்கைகள் மேற்கொண்டு தனது பணியை சிறப்பாக செய்து வந்தார். இந்த நிலையில் இவரது பனிக்காலம் தற்போது நிறைவடையவுள்ள நிலையில், யார் அடுத்த தலைமை செயலாளர்கள் என்ற கேள்விகள் இருந்தது.
அந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சிவதாஸ் மீனா IAS-ஐ புதிய தலைமை செயலாளராக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. நாளையுடன் இறையன்புவின் பதவி காலம் முடியவிருக்கும் நிலையில், தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 1-ம் தேதி பதவி ஏற்கவிருக்கும் சிவதாஸ் மீனா IAS, தமிழ்நாடு அரசின் 49-வது தலைமை செயலாளர் ஆவார்.
யார் இந்த சிவதாஸ் மீனா IAS ?
ராஜஸ்தானை சேர்ந்தவர் சிவதாஸ் மீனா. ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் எஞ்சினியரிங் படித்த இவர், ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்திருக்கும் இவருக்கு, ஜப்பான் மொழியையும் கற்றுள்ளார்.
1989 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்சை சேர்ந்த இவர், 30 ஆண்டுகள் ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்டவர் ஆவார். தமிழக கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக சிவதாஸ் மீனா பணியில் சேர்ந்த இவர், காஞ்சிபுரம் உதவி கலெக்டராக தனது பணியை துவங்கினார். பின்னர் கோவில்பட்டியில் உதவிக் கலெக்டர், வேலூரில் கூடுதல் கலெக்டர், மாவட்ட கலெக்டர் என தொடர்ந்து பதவி வகித்தார்.
ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றினார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளை சிவ்தாஸ் மீனா வகித்து வந்த சிவதாஸ் மீனா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 செயலாளர்களில் ஒருவராக இருந்தார்.
இதையடுத்து ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சேர்மனாக பணி புரிந்து வந்தார். இதைதொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு சிவதாஸை தமிழ்நாட்டுக்கு மீண்டும் அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி சிவதாஸ் மீனாவை ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் மாநில அரசு பணிக்குத் திருப்பி அனுப்பியது. தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் நிலையில், இவரை 49-வது தலைமைச் செயலாளராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.