கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்து அமைந்துள்ளது அம்பராம்பாளையம் என்ற கிராமம். இங்கு காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (36). இவருக்கு அஜ்மல் (15) என்ற 10-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். கபடியில் ஆர்வம் கொண்ட அஜ்மலை அவரது தந்தை ஊக்குவித்து வந்துள்ளார். இந்த சூழலில் தனது மகனை திருச்சியில் நடைபெறும் கபடி போட்டிக்கு அனுப்பி வைப்பதற்காக கோவை நவக்கரை பகுதிக்கு நேற்று மாலை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது பொள்ளாச்சியில் இருந்து வேலந்தாவளம் வழியாக சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கே.ஜி.சாவடி அருகே இரு சக்கர வாகனம் வந்தபோது, எதிரே வேகமாக வந்த கார் ஒன்று சட்டென்று மோதியது. இதில் வாகனம் சுமார் 10 அடி உயரத்திற்கு மேல் தூக்கிவீசப்பட்டதில் படுகாயமடைந்த ஜாகிர் உசேன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
மேலும் அவருடன் பயணித்த 10 வயது மகன் அஜ்மல் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு போலீசுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், உயிரிழந்த ஜாகீரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த கோர விபத்து ஏற்பட்டபோது, தூக்கி வீசப்பட்ட ஜாகீரின் பைக், பின்னால் வந்துகொண்டிருந்த மினி வேனின் முன் கண்ணாடியை உடைத்து கொண்டு சிக்கியது. இதில் வேனில் வந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
கோவையில் 15 வயது மகனை கபடி போட்டிக்கு அழைத்து செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் தந்தை உயிரிழந்ததோடு, மகன் உயிருக்கு போராடி வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது.