கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பெண் ஒருவர் முகநூலை தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அதில் வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் நட்பாக பழகி வந்த நிலையில், அந்த நபர் இந்த பெண்ணுக்கு தனது நாட்டில் இருந்து தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலையுர்ந்த பொருட்களை பரிசாக வழங்கவுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் பொருட்கள் வாங்குவது குறித்து வீடியோ கால் மூலம் காட்டியுள்ளார். எனவே அந்த பெண் அவரை முழுதாக நம்பியுள்ளார். இதையடுத்து சில நாட்களில் திருவனந்தபுர விமான நிலையத்தில் இருந்து கஸ்டம் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக அந்தப் பெண்ணை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது, அதனை பெற வேண்டுமென்றால் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
எனவே இவரும் அந்த நபர் கேட்ட ரூ.10 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார். பின்னரே நேரில் வந்து அந்த பார்சலை பெறுவதற்காக அந்த பெண் வந்தபோது, அதிகாரி போல் வந்த நபர் ஒருவர் அந்த பார்சலில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள டாலர் இருப்பதாகவும், அதனை பெற மேலும் பணம் செலுத்த வேண்டுமெனவும் கூறியுள்ளார். இதனால் குழப்பமடைந்த அவர் உடனே தனது முகநூல் நண்பருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அவரும் அந்த பெண் பணத்தேவை என்று கூறியதால் அனுப்பி வைத்ததாக கூறியதோடு, அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்து பார்சலை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். இதையடுத்து எங்கெல்லாமோ புரட்டி ரூ.10 லட்சத்தை அந்த அதிகாரியிடம் கொடுத்துள்ளார். இருப்பினும் அவருக்கு அந்த பார்சல் கிடைக்காமல் மேலும் பணத்தை கேட்டுள்ளனர். இவ்வாறாக அந்த பெண் சுமார் ரூ.21.5 லட்ச பணத்தை இழந்துள்ளார்.
பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் உணர்ந்து அந்த நபரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து இது குறித்து மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். தொடர்ந்து இதுகுறித்து சைபர் கிரைம் போலீசர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் செல்போன் சிக்னலை வைத்து அவர்கள் டெல்லியில் இருப்பதை கண்டறிந்து அதிகாரிகள் டெல்லி விரைந்தனர். இதையடுத்து இந்த வழக்ககில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பாஸ்கல் பங்கோரா (36), மார்டின் டபேரி (24) ஆகியோரை டெல்லி மாநிலம் துவாரகா மாவட்டத்தில் வைத்து குமரி மாவட்ட போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவர்களிடமிருந்து 22 மொபைல் போன்கள், 26 சிம் கார்டுகள் மற்றும் 16 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகநூல் மூலம் பழகி காஸ்ட்லி பரிசு அனுப்புவதாக கூறி குமரி பெண்ணிடம் இருந்து நைஜீரியாவை சேர்ந்த நபர்கள் ரூ.21 லட்சத்தை ஏமாற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.