தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்காளத் தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி முத்துமாரி. இவர் கடந்த மாதம் 15ம் தேதி இரவு தனது வீட்டின் முன்பு அமர்ந்து இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திடீரென முத்துமாரி கழுத்தில் அணிந்து இருந்த 12பவுன் தங்க நகையைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அதே போன்று கோவில்பட்டி ஏ.கே.எஸ் தியேட்டார் சாலையில் நடந்து சென்று கொண்டு கோவிலைச் சேர்ந்த வெள்ளாத்தாய் என்ற பெண்ணிடமும் 2 மர்ம நபர்கள் 6 பவுன் தங்க நகையை பறித்துள்ளனர். இந்த இரண்டு கொள்ளைச் சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சனாபுல்லா, அவரது மனைவி ரசியா, மகன் ஜாபர் ஆகிய மூன்று பேர்என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் மூன்று பேரையும் கைது செய்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்த மூன்று பேரும் மகாராஷ்டிரா மாநிலத்தினை பூர்வீகமாக கொண்டவர்கள். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
மேலும் இவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதோடு திரைப்படம் எடுப்பதற்காகத் தந்தை, மகன், தாய் என மூன்று பேரும் சேர்ந்து கொண்டு பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தான் இவர்கள் போலிஸாரிடம் சிக்கியுள்ளனர். இதையடுத்து போலிஸார் மூன்று பேரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திரைப்படம் எடுக்க குடும்பமே வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.