ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் இரயில் நிலையம் அருகே 2-ம் தேதி இரவு நேரத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட 3 இரயில்கள் மோதி விபத்துக்களாகின. இந்த கோர விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த விபத்தில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தொடர்ந்து இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில், ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் இந்த விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தார். தற்போது இந்த இரயில்கள் விபத்துக்கான காரணம் சதியா அல்லது கவனக்குறைவா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், சில தவறான எண்ணம் கொண்டவர்கள் இதற்கு மத சாயம் பூசி வாருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் இந்த சம்பவம் ஒரு சதி என்று கூறி, இதற்கு மத ரீதியான பிரசாரத்தை முன்வைக்க முயல்கின்றனர். இதற்கு ஒடிசா இரயில்வே துறையும் இப்படி போலியான செய்தி பரப்ப வேண்டாம் என்று கோரிக்கை வைத்த போதிலும், இதுகுறித்த தவறான தகவல்கள் வெளிவந்த வண்ணமாக இருக்கிறது.
அந்த வகையில், இந்த விபத்துக்கான காரணம் ஒரு இஸ்லாமியர் என்று கன்னியாகுமரியை சேர்ந்த பாஜக பிரமுகர் போலி செய்தி பரப்பி வந்தார். மேலும் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் சரகம், பருத்தி விளை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். வழக்கறிஞரான இவர் பாஜகவின் பிரமுகராக அறியப்படுகிறது. இந்த சூழலில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒடிசா இரயில் விபத்து தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில், "இதுவரை ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து 300 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது மற்றும் 900 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தது அது நடந்த ரயில் நிலையத்தின் பெயர். பஹானாகா நிலையம். இந்த நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டரின் பெயர் *முகமது ஷெரீப் அகமது*. விபத்து குறித்து விசாரிக்க.." என்று குறிப்பிட்டு வெறுப்புணர்வை தூண்டும் வகையில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.
ஆனால் அந்த புகைப்படமானது, 2004-ல் எடுக்கப்பட்ட வேறொரு வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும். மேலும் பஹானாகா பஜார் இரயில் நிலையத்தில் பணிபுரிபவர்களின் பட்டியலில் எஸ்.பி.மொகந்தி என்று இருக்கிறதே தவிர, முகமது ஷெரீப் அகமது என்ற பெயர் அந்த பட்டியலில் இல்லை. இந்த சூழலில் ஒன்றும் தெரிந்துகொள்ளாமல் போலியான செய்தியை பரப்பி வந்த பாஜக பிரமுகர் செந்தில்குமாருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
தொடர்ந்து செந்தில்குமார் மீது திமுகவை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் செந்தில்குமார் மீது 153, 153A (1)(a), 505 (1)(b), 505 (2) IPC பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இவ்வாறு போலி பிரசாரம் செய்து பாஜகவினர் வெறுப்புணர்வு பரப்பி வருவதற்கு மக்கள் மத்தியில் கண்டனம் வலுத்து வருகிறது.